25/07/2017

செருப்பு தூக்கிய கிருஷ்ணர்


பாரதப் போரின் உச்சம்
பார்க்கும் கண்களில் அச்சம்!
பீறிடும் எரிமலைக் கனலாய்
பீஷ்மரும் பிணமலைக் குவித்தார்!

போரினில் ஐவரை அழிக்க
போட்டார் சபதம் பீஷ்மர்!
தர்மத்தின் நடுநிலை காக்க
தன்னிலை மறந்தார் பீஷ்மர்!

பதிகளைக் காத்திட வேண்டியே
பாஞ்சாலி கிருஷ்ணரை நாடினாள்!
சகலமும் அறிந்த கிருஷ்ணரோ
சகுனிபோல் திட்டமும் தீட்டினார்!

பீஷ்மரின் பாதத்தில் வணங்கியே
ஆசிகள் வாங்கிடக் கூறினார்!
பரிபோல் பார்வையை செலுத்தியே
அடிகளை வணங்கிடக் கூறினார்!

காலடி ஓசையைத் தவிர்த்திட
காலணி தவிர்த்திடக் கூறினார்!
திரௌபதி காலணி இரண்டையும்
திருக்கரம் பற்றியே கழற்றினார்!

கடவுளாய் இருந்த போதிலும்
கர்மத்தில் யோகியாய் மாறினார்!
பாதணி தூக்கியச் செயலினால்
பரதனைப் போலவே மாறினார்!

தீர்க்க சுமங்கலி ஆசியை
பீஷ்மரும் வரமெனத் தந்தார்!
யாரோ மாதென எண்ணியே
பீஷ்மரும் வாக்கினை வழங்கினார்!

ஆட்ட நாயகன் கிருஷ்ணனே
ஆட்டத்தின் போக்கை மாற்றினார்!
சபதத்தை வரமாய் மாற்றியே
சர்வத்தில் தர்மத்தை நிறுத்தினார்!

No comments: