23/05/2021

கலையும் கலைஞனும்----------குறள் வெண்பாக்கள்



கலைஞானம் இல்லார்முன் கல்லார்போல் காட்டி
சிலைபோல நின்றால் சிறப்பு
(1)

கலையறியாக் சுற்றார்முன் கற்றதைச் சொன்னால்
விலையென்ன என்பார் விடு
(2)

கலையைக் கடவுளாய் காண்போன் அறிவான்
விலையில்லா ஒன்றேக் கலை
(3)

கலைஞனின் கண்ணால் கலையினைக் கண்டால்
மலையையும் தாண்டும் மதிப்பு
(4)

தன்னலமே இல்லாமல் தந்திடும் ஓர்கவிஞன்
என்னய்யா கேட்டிடுவான் இங்கு?!
(5)

பணத்தை விடுத்துப் படைப்பின்பின் போவோர்
மனத்தை அறிந்து மதி
(6)

தன்னை மறந்துத் தருவிக்கும் சிற்பியின்
அன்னையாய் ஆவாள் அவள்
(7)

பொழுதினைப் போக்கும் பொருளென எண்ணி
விழுபவர்க் கில்லை விரு(ழு)து
(8)

வருவோர் வரட்டும் வராதோர் விடட்டும்
தருவதை நன்றாகத் தா
(9)

இருக்கையில் பாரார் இறந்தால் புகழ்வார்
இருக்கும் வரைக்கும் எழுது
(10)

✍️செ. இராசா

No comments: