10/05/2021

சுருங்கச் சொல்-------------குறள் வெண்பாக்கள்------வள்ளுவர் திங்கள் 158

நீட்டி முழக்காமல் நேராக எப்போதும்
கேட்கச் சலிக்காமல் சொல்
(1)

விதைக்குள் பொதிந்த விருட்சத்தைப் போலே
விதைக்கட்டும் சொல்கின்ற சொல்
(2)

ஹைக்கூபோல் கூறாமல் குக்கூபோல் கூவினால்
தைக்காமல் போய்விடும் சொல்
(3)

அவசர ஊர்திபோல் ஆர்ப்பரிக்கும் ஊரில்
அவசிய மானதைச் சொல்
(4)

ஒலியாய் வரியாய் உருவான சொல்லில்
மொழியாத மௌனமும் சொல்
(5)

கம்பனே வந்தாலும் காலத்தை உள்வாங்கிக்
கம்மியாய்ச் செய்வான் கவி
(6)

இலக்கணம் வேண்டி இடைச்செருகல் செய்தால்
கலகலத்துப் போகும் கவி
(7)

வள்ளுவர் நூல்போல் வடிக்கின்ற நூலையேப்
பல்லாண்டு போற்றிடும் பார்
(8)

கூறியதைக் கூறியே கூறு'வதை செய்வோர்க்குக்
கூறிட யாருளர் கூறு?
(9)

குறைவாய்க் கிடைப்பதற்கேக் குன்றாய் மதிப்பு
குறையின்றி நன்றாய்க் கொடு
(10)

✍️செ.‌இராசா

No comments: