23/05/2021

இருள்


 

கருவறை இருள் முதல்
கல்லறை இருள் வரை
இந்த இருள்களுக்கிடையேதான்
எத்தனை இருள்கள்?

நாட்கள் மூடும் இமைகள்தானே
நகர்கின்ற இரவுகள்?!
இரவை மறைக்கும் இடைவெளிதானே
எரிகின்ற பகல்கள்?!

இங்கே இமைகள் மூடினால்
இருள் கவ்வும்!
எங்கே இமை திறந்தால்
இருள் ஒளிருமா?

இருளின் தியாகத்தால்தானே
ஒளியின் பிரகாசம்!
இங்கே...
இருளின்றி ஏது விளக்கு?!
இல்லையேல் ஏன் விளக்கு
எங்கே...
விளக்கின் அடி இருளை
விலக்கிடுமா ஓர் விளக்கு?!

சூரியனே பெருவிளக்கென்றால்
சூரியனில் கருந்துளைகள் ஏன்?!

அணுவின் கரு முதல்
அண்டத்தின் வெளி வரை
பிரபஞ்சம் அனைத்துமே
இருளில் பூத்த விட்டில்கள் தானே?!

நடராஜ தத்துவம் முதல்
பிங்பேங்க் தியரி வரை
பிரபஞ்சத் தத்துவமே
இருளை உடைத்த பெருவெடி தானே?!

இருள்
ஒளியின் இருப்பு
ஒளி
இருளின் துறப்பு
இரண்டுமிங்கே
இயக்கத்தின் இருப்பு

இருள்
ஒளியின் தந்தை
ஒளி
இருளின் பிந்தை
இருண்டுமிங்கே
இயக்கத்தின் விந்தை

இனியும்..
இருளால் அலற வேண்டாம்..
இருளுக்குள் ஒளி உள்ளதால்....
இனியும்..
இருளை வெறுக்க வேண்டாம்
இருளால் ஒளி தெரிவதால்...

✍️செ. இராசா

No comments: