09/05/2021

அனுபவப் பதிவு-19------------நான் யார்?

#2001-2003

 
உண்மையில் இந்தச் சென்னை ஏன் அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது என்பதை அங்கு வந்த ஆரம்பத்திலேயே கண்டுகொண்டேன். இன்றும் என்னால் மறக்க முடியாதது என்றால் அது மின்சார ரயில்ப் பயணங்கள்தான். ஆம்....என்னதான் உடைகளைத் தேய்த்து அழகாக உடுத்தி ரெயிலில் ஏறினாலும் ஐந்தே நிமிடத்தில் கசக்கிப் பிழிந்து துப்பிவிடுவார்கள் பாருங்க....அட அதிலும் ஒரு சுகம் இருக்குங்க... எப்படி என்றா கேட்கிறீர்கள்?!! மாதாந்திர பயணச் சீட்டு எடுத்துக்கொண்டு, எத்தனை முறை வேண்டுமானாலும் போய் வரலாம். ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஒரு சிறப்பு உண்டு. கிண்டியில்- குஷ்பூ இட்லி/உப்புமா, மவுண்டில்- 1 ரூ ஐஸ் கிரீம் (அன்றைய விலை), சைதையில்- இரத்தப் பொறியல், மாம்பழத்தில்- கடைவீதியில் நடை.....அப்புறம் அழகான கானா பாட்டு தினமும் கேட்கலாம்.....etc. etc. இப்படி போய்க்கொண்டே இருக்கும்.
 
அதில் முக்கியமானது, என் வாழ்க்கையை மாற்றிய ஒரு சிறு புத்தகம், “நான் யார்?” என்ற தலைப்பில் என் பெரியம்மா வீட்டில் பார்த்ததுதான். ஆம்.. அதுதாங்க என் ஆன்மீகப் பயணத்திற்கு முதல் தீனி போட்ட புத்தகம். சிறு வயதில் நான் தேடிய கேள்விக்கு சரியான விடை அதில் இருந்தது. அதன் வெளியீடு மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் என்றிருந்தது. அந்த இடத்தைத் தேடிச் சென்று பின்னர் அங்கே வாரா வாரம் தொடர்ந்து போய்வந்தேன். பக்தியும் ஞானமும் இணைந்தே கிடைத்தது. அனைத்து மதங்களும் போகும் பாதை ஒன்றே என்ற சர்வமத சங்கமத்தின் ஒரு புள்ளியை அல்ல சமுத்திரத்தைக் கண்டேன். பின்நாட்களில் கல்கத்தா, கவுகாத்தி என்று எங்கு சென்றாலும் அங்கே ஹீராமகிருஷ்ண மடங்கள் சென்றுவந்தேன். அனைத்து மதங்களும் சொல்வது ஒன்றே என்பதைப் புரிந்து கொண்டதால், கத்தார் சர்ச்சில் இரண்டு வருடங்கள் ஒரு பாடகராகவும் இருந்தேன். மசூதியும் சென்று வந்தேன்.....இப்படி எல்லாம் சென்ற வாழ்க்கை, பிரம்மா குமாரி ராஜயோகம் வழியாக அறிவுத்திருக்கோவில் கண்ட வேதாந்த மகரிஷியின் மனவளக்கலையில் நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் அந்த “நான் யார்?” என்ற புத்தகமே.
 
இப்போதுகூட எப்போதெல்லாம் சென்னை சென்றாலும் மயிலாப்பூர் போய் நிறைய புத்தகங்கள் வாங்கி வருவேன். அறிவுக்கண்ணை ஆழமாகத் திறப்பது புத்தகங்கள் என்றால் இந்தப்புத்தகங்கள் மெய்ஞானத்தையும் சேர்த்து திறக்கவல்லவை என்றால் அது மிகையல்ல.
அதை உள்வாங்கித்தான் இன்னும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
 
பயணம் தொடரும்....
 
✍️செ. இராசா

No comments: