22/11/2021

நான் இரசித்த கவிதை 1



ஒரு நல்ல இரசிகன் தானே நல்ல படைப்பாளியாக முடியும். அந்தவகையில் நான் படைப்பாளியா இல்லையா என்பதெல்லாம் உங்களைப்போன்ற இரசிகர்களின் கையில். ஆனால், நான் கண்டிப்பாக நல்ல இரசிகன் தான் என்பதை எம்மால் சொல்ல முடியும். 😊😊😊😊

இங்கே முகநூலில் எத்தனையோ நல்ல படைப்புகள் அங்கங்கே கொட்டிக்கிடக்கின்றன. அவற்றுள் சில படைப்புகள் நம்மை உலுக்கியும் விடுகின்றன. அவற்றையெல்லாம் அப்படியே படித்துவிட்டு முடிந்தால் ஒரு விருப்பக் குறியீடோ அல்லது கருத்தீடோ போட்டுவிட்டு நாமும் கடந்து போய் விடுகின்றோம். (அதில் பலரும் எந்த நேர்-எதிர் வினையும் ஆற்றுவதில்லை என்பதும் உண்மையே ) இனி அப்படி நாமும் கடந்துபோக வேண்டாம் என்று நினைத்ததால் இப்பதிவைத் தொடங்க நினைக்கின்றேன். இதற்கு முன்னோடி நம்ம கவிஞர் செல்வா சித்தப்பு (செல்வா ஆறுமுகம்) அவர்கள்தான். அவர்போல் பத்துக்கு பத்து என்று மிக நீண்ட பதிவாக கொடுக்கவெல்லாம் அடியேனால் முடியாது என்பதால் அவ்வப்போது ஒரு கவிதை மட்டும் எப்போது தோன்றுகிறதோ அப்போது எழுதலாம் என்று நினைக்கின்றேன். அது யார் கவிதையாக வேண்டுமானாலும் இருக்கலாம். (இங்கே கவிஞரின் உயரம் முக்கியமல்ல, கவிதையின் உயரமே முக்கியம்)

அந்த வகையில் அவர் எழுதி இருந்த கீழ்வரும் கவிதை என்னை மிகவும் உலுக்கியது.

#தேய்ந்த_உடலை_சுமந்திடுவது
#எத்தனை_கனமானது,
#அதேவேளையில்
#மரணம்தான்_எத்தனை_அற்புதமானது,
#கனத்த_கோழியின்_உயிரையும்
#இறகின்_எடைகூட_இன்றி
#ஆகாயத்தில்_மிதக்க_வைத்திடுகிறதே!!

✍️பனிப்பூக்கள் பார்த்திபன்

"தேய்ந்த உடலை சுமந்திடுவது
எத்தனை கனமானது"---ப்பா செம்ம.... இங்கே அவர் ஏன் முதிர்ந்த உடலை என்று சொல்லக் கூடாது...அதான் கவிதை...

அடுத்து பாருங்க....

கனத்த கோழியின் உயிரையும்---அது ஏன் கழுகு, புறா என்று சொல்லக்கூடாது...கோழி தானே அதிகம் பறக்காது, காரணம் அதன் கனம், அடுத்து வருவதில்தான் கவிதையின் உயிர் நாடி அடங்கியுள்ளது. ஆம்...இறகின் எடை கூட இன்றி ஆகாயத்தில் மிதக்க வைக்கிறதாம்...அதாவது உயிர் போன அந்த நிமிடம்.......

யோசித்துப் பாருங்கள். அவ்வளவு பெரிய பிள்ளையாருக்கு வாகனம் மிகச்சிறிய மூஞ்சூறு. அதன் தத்துவம் என்ன? மிகப்பெரிய பூத உடலை இயக்கும் கண்ணுக்குத்தெரியாத உயிர்...அதுதானே? ஆம்....எவ்வளவு பெரிய மனிதனுடைய உயிரும் ஆகாயத்தில் மிதந்து போகையில் அங்கே விழுவதென்ன வெறும் உடல் மட்டும் தானா? அவன் சுமந்த அத்தனைத் தலைக்கனமும் தானே?

சங்க இலக்கியங்களில் பதினெண் கீழ்கணக்கில் முதலில் வருவதென்ன? யாக்கை (உடல்) நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை பற்றிய பாடல்கள் போல் அதையே இக்கவிதை சொல்வதாய் எமக்குத் தோன்றுகிறது. மேலும் அக்கவிதையை நன்றாகப் பாருங்கள். அங்கே எந்த இலக்கண கட்டமைப்பும் இல்லை, அதே சமயத்தில் நவீனம் என்றெல்லாம் சொல்லி பசப்புகிற போக்கும் இல்லை. ஆயினும் அனைத்தையும் உள்ளடக்கிய அற்புதமான கவிதை.

தம்பியின் "#மணல்_கடிகாரம்" கவிதை நூல் ஏற்கனவே படித்துள்ளேன். உண்மையில் அந்நூலெல்லாம் கவிதை உலகின் ஆகச்சிறந்த நூல்களின் வரிசையில் வரவேண்டிய நூல் என்பேன். ஆனால், என்ன செய்ய? நல்ல கவிஞனின் படைப்பை இவ்வுலகம் அவ்வளவு எளிதில் கண்டுகொள்ளுமா என்ன?!...இருப்பினும் தம்பி நீங்கள் தொடருங்கள்...நாங்கள் இரசிப்போம்.

✍️செ. இராசமாணிக்கம்


No comments: