24/06/2020

குறளுரையாடல்_1




நேற்றையதினம் தமிழ்ச்சோலையின் #வள்ளுவர்_திங்கள்_116வது நிகழ்வின் போது மதிப்பிற்குரிய மருத்துவர் Gopala Krishnan ஐயா அவர்கள் #அரண் என்ற தலைப்பில் 10 குறள் வெண்பாக்கள் அடங்கிய ஓர் அதிகாரம் படைத்திருந்தார்கள். அதை நான் வாழ்த்திப் பின்னூட்டம் போட அவர்களோ அதற்கும் குறள் வெண்பாவில் பதில் போட பின்னர் நானும் அவருமாய் மாறி மாறிப் பேசிய #குறளுரையாடலே இது:

#ஐயா_1
தம்பி யுடையார் படைக்கஞ்சார் தம்மைத்தாம்
நம்பிப் படைக்கலாம் நன்று.

#நான்_2
நன்றாய்ப் படைக்கின்றீர் நற்றமிழ் சீர்பெறவே
இன்புற்றேன் உண்மையிலே இன்று

#ஐயா_3
இன்று தமிழ்ச்சோலை இன்னமுதம் தந்தமை
என்றும் தொடரும் எழில்

#நான்_4
எழிலாய் எழுதுவோர் எண்ணிக்கை கூட
அழிவுண்டா சோலைக்குச் சொல்

#ஐயா_5
சொல்லென்றால் தோன்றுவ(து) உன்னதச் செந்தமிழ்
நில்லாம லோதுவாய் நீ

#நான்_6
நீர்சொன்ன சொல்லை நிலையான சொல்லாக்கி
நேர்த்தியுடன் நின்றிடுவேன் நான்

#ஐயா_7
நானற்று யாக்கும் நறுந்தமிழ் செம்மையாம்
தானுற்று நோக்கும் தவிப்பு

#நான்_8
தவிப்புடன் நற்றமிழைத் தப்பின்றிக் கற்றோர்
கவித்துவமாய் வாழ்கின்றார் காண்

#ஐயா_9
காண்பதுவும் கேட்பதுவும் கண்ணதுவும் பைந்தமிழின்
மாண்புக்கே இல்லையாம் மாற்று

#நான்_10
மாற்றுவதை மாற்றியே மாறுகின்ற மாந்தரை
போற்றிடும் என்றும் புவி

#ஐயா_11
புவியில் குவிந்து புனிதம் கனிந்து
கவிதை தருந்தமிழ்க் கை

#நான்_12
கைப்பேசித் தட்டச்சில் கற்றதமிழ் நற்சொல்லைக்
கைப்பற்றிச் செய்தேன் கவி

#ஐயா_14
கவிதை கருவாகும் காலமறி யேன்அக்
கவிதை பிறக்கும் கணம்

#நான்_15
கணம்கணம் வாழ்வோரே காலத்தின் சாட்சி
பணம்கனம் இல்லை படி

#ஐயா_16
படித்தோர் எனப்படுவோர் பண்புயா தென்றால்
இடித்துரை யாடும் இயல்பு

(இத்தோடு முடித்துக் கொண்டோம். இப்படிப் பேசும் குறளுரையாடல் என்பது மிகவும் மகிழ்வைத் தருகிறது என்றால் அது மிகையல்ல)

✍️ஐயாவுடன் & செ.இராசா

#தமிழ்_இனிது

No comments: