10/06/2020

குழப்பம்

#குழப்பம்

குழம்பிய குட்டையில்
மீன் பிடிக்க முடியும்
குழம்பிய மனதில்
கவி பாட முடியுமா?!
எனில்‌
குழப்பம் அபத்தமானதா?!

யார் சொன்னார்கள்?
குழப்பம் அபத்தமென்று?!

அர்ச்சுனனின் குழப்பம்தானே
கீதையின் ஆதாரம்
மாணிக்கவாசகரின் குழப்பம்தானே
திருவாசகத்தின் ஆதாரம்
கண்ணதாசரின் குழப்பம்தானே
கவி ஆட்சியின் ஆதாரம்
ஆளும் கட்சியின் குழப்பம்தானே
அடுத்த ஆட்சியின் ஆதாரம்

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்

குழப்பம் குழப்பமாகவே நீடித்தால்
குழப்பம் அபத்தமே...
குழப்பம் குழம்பியபின் தீர்வுற்றால்
குழப்பம் அற்புதமே....

குழப்பம் தெளிவுற்றால்
....குழப்பம் வெல்லும்
குழப்பம் திரிவுற்றால்
....குழப்பம் கொல்லும்‌

ஆம்...

புத்தனின் குழப்பம்
........ போதியில் முடிந்தது
ஹிட்லரின் குழப்பம்
........போரினில் முடிந்தது

சில குழப்பங்கள் தீங்கானது
அது சகுனியின் ஊதாங்குழல்போல்
.....தீயை மூட்டியே குளிர் காயும்

சில குழப்பங்கள் நியாயமானது
அது கண்ணனின் ஊதுகுழல் போல்
.....இசை கூட்டியே இன்பம் கூட்டும்

பாலின் குழம்பிய பரிணாமம் தான் நெய்
ஊழின் குழம்பிய பரிணாமம் தான் நீ

குழம்பு உன்னில் தெளிவடைய
குழப்பு உன்னை நீ அறிய...

✍️செ. இராசா

No comments: