19/06/2020

பாரதப்போரின் காட்சிகள் குறள் வடிவில்


#பாரதப்போரின்_காட்சிகள்
#குறள்_வடிவில்

#முன்னுரை

பதினெட்டு சேனைகள் பங்களித்த போரும்
பதினெட்டு நாட்களே பார்
(1)
பாண்டவரைக் கொன்றிடப் பாரதப் போர்நடத்தி
மாண்டது கௌரவர்கள் வாழ்வு
(2)

சகுனியின் திட்டத்தை சாய்த்திட்ட கண்ணன்
சகலர்க்கும் ஊதினான் சங்கு
(3)

#முதல்_நாள்
#விராட_இளவரசன்_மரணம்

சத்திய தர்மரின் சாவைத் தடுக்கவே
உத்திரன் விட்டான் உயிர்
(4)

#இரண்டாம்_நாளுக்குப்_பின்னர்
#பீஷ்மரின்_ஆட்டம்

முதலிரு நாட்களாய் மௌனித்த பீஷ்மர்
அதன்பின் கொடுத்தார் அழிவு
(5)

#பத்தாம்நாள்_பீஷ்மரின்_நில

ஐயிரு நாட்களில் ஐம்படை மாய்த்தவர்
போயினார் ஊழ்வந்த போது
(6)

#கர்ணன்_படை_புகல்

#பதினொன்றாம்_நாளில் படைக்கரண் ஆகி
உதித்தது கர்ணன் ஒலி(ளி)
(7)

#கௌரவர்_மரணத்தின்_தொடக்கம்

நூறில் இருபதை நூலெனப் பிய்த்தது
மீறிய பீமன் வெறி
(8)

#பனிரெண்டாம்_நாளில் பலியான பாதி
பனிமேல் கதிரவன் போல்
(9)

#அபிமன்யு_மரணம்
துடித்த துரியனும் சூட்சுமம் செய்தே
அடித்தான் அபிமன்யு வை
(10)

#பாண்டவரின்_தாக்குதல்

மடிந்த மகனால் மதமுற்ற ஐவர்
வெடித்தனர் வில்லால் வெடி
(11)

இரவில் வெடித்த எரிமலைப் போரில்
இரங்கவே இல்லை எமன்
(12)

மீதமுள்ள கௌரவரில் மிச்சம் இருந்தது
பூதமோ பேயோ புதிர்
(13)

#கடோத்கஜன்_மரணம்
பீம மகன்தந்த பேரதிர்வை இந்திர
பாணம் அடக்கியது பாய்ந்து
(14)

#சிந்துராஜ_ஜெயத்ரதன்_மரணம்
சுதர்சனச் சக்கரத்தால் சூரியனும் மங்க
சிதைந்தது மச்சான் சிரம்
(15)

#துரோணரின்_மரணம்
துரோணரின் பற்றே துரோணரை வீழ்த்த
உரோமமாய் விட்டார் உயிர்
(16)

#கர்ணனின்_மரணம்
#பதினாறாம்_நாளின் படைத்தலை கர்ணன்
பதினேழாம் நாளில் பலி
(17)

விதியால் துரியனின் மித்திரன் ஆகி
சதியால் விழுந்தான் சரிந்து
(18)

#துச்சாதணன்_மரணம்
துகிலை உரித்தவன் தோலை உரிக்க
அகிலம் அதிர்ந்ததாம் அன்று
(19)

#சகுனியின்_மரணம்
#பதினெட்டாம்_நாளில் பகடைபோல் ஆன
சதிகார மாமனின் சாவு
(20)

#துரியனின்_மரணம்
தொடையைப் பிளந்து துரியனைக் கொன்றே
கடைசியில் வெற்றிக் கனி
(21)

#முடிவுரை
அதர்மத்தின் போக்கை அதன்வழி சென்றே
அதனை அதனால் அடி
(22)

✍️செ.இராசா
(முன்னுரை முடிவுரை தவிர்த்து நிகழ்வுகளும் 18குறள் வெண்பாக்களாய்ப் படைக்கப்பட்டுள்ளது)

No comments: