18/08/2018

சொல் வெ(கொ)ல்லும் (குறளின் குரலில்)


அன்புடையார் சொல்லுகின்ற
பண்புடைய வார்த்தைகளே
இன்பமிகு காரியத்தை
இனிதாக நடத்துவதால்
சொற்களே வெல்லுமென்ற
சூத்திரம் நாமறிவோம்!

அன்பிலார் சொல்லுகின்ற
பண்பிலா வார்த்தைகளே
இன்னல்மிகு காரியத்தை
இரக்கமின்றி நடத்துவதால்
சொற்களே கொல்லுமென்ற
சூட்சமம் நாமறிவோம்!

அவையில் அஞ்சாத
ஆன்றோரின் சொல்லாற்றல்
சென்ற இடமெல்லாம்
வென்று வாகை சூடுவதால்
சொற்களால் கோட்டைகட்டும்
சொல்வன்மை விரும்பிடுவோம்!

அவையைக் கணிக்காமல்
அளந்துவிடும் சிலபேரின்
கல்லாமைக் குணத்தாலே
காயங்கள் மிகுவதினால்
சொற்களால் கொல்பவரை
சொல்லாமல் விலக்கிடுவோம்!

✍️செ. இராசா

No comments: