08/08/2018

கலைஞர்



கலைஞரின் வரலாற்றை
கவிதையாய் சுருக்குவது
கடல்கள் அனைத்தையுமே
கடுகுக்குள் அடக்குவதே....

அனைத்தையும் கவிபாட
ஆயிரம் நூல்கள் வேண்டும்...
ஆயினும் சிறியோன் நான்
அடிசுருக்க முயலுகின்றேன்
அடிகளிலே பிழை இருப்பின்
அடியேனைப் பொறுத்தருள்வீர்...

திருவாரூர் மாவட்டம்
திருக்குவளை கிராமத்தில்
முத்துவேலர் அஞ்சுகத்தின்
மூன்றாம் மகனாக
திராவிடச் சூரியானாய்
திருமகனார் அவதரித்தார்

உயர்நிலைப்பள்ளியிலே
இடமில்லை என்றதுமே
உளமெல்லாம் ரணத்தோடு
குளம்நோக்கிப் பாய்ந்தோட;
ஆசிரியர் பதறிவிட்டார்
அனுமதியும் தந்துவிட்டார்!

பிஞ்சு வயதிருந்தே
அஞ்சாத போர்குணத்தை
எஞ்சிய காலம்வரை
எரிமலையாய் வைத்திருந்தார்!

உயர்நிலையில் அவர்கொண்ட
உரிமைப் போராட்டத்தை
உயிர்போன பின்னாலும்
உடமையாய்க் கொண்டிருந்தார்!

தட்சணாமூர்த்தி என்ற
தன்னுடைய இயற்பெயரை
“கருணாநிதி” என்றவரே
தனக்காகச் சூடிக்கொண்டார்..

தமிழக மாநிலத்தில்
தமிழை நிலைநாட்ட
இந்தி எதிர்ப்பிற்கு
இளைஞரின் படை செய்தார்....

அண்ணாவின் தம்பியாய்
அந்நாளில் அவரிணைந்து
அனைவரின் தமையனாய்
பின்னாளில் அவரானார்...

மாணவராய் இருந்தபோது
“மாணவ நேசன்” தந்து
இளைஞராய் ஆனபின்னே
“முரசொலி” முழக்கமிட்டார்

எழுத்துச் சூரியனாய்
எங்கெங்கும் ஒளிவீசி
பேச்சுப் பேரொளி(லி)யால்
பெரியாரை மயக்கிவிட்டார்...

கருப்புக் கொடிமீது
கைவிரல் ரத்தம் சிந்தி
திராவிடர் கழகத்தின்
தூணாக மாறிநின்றார்....

எத்தனை போராட்டங்கள்?
எத்தனைப் பழிச்சொற்கள்?
எத்தனை துரோகங்கள்?
எத்தனை துன்பங்கள்?

அத்தனையும் அடுக்கடுக்காய்
அவர்மீது விழுந்தாலும்
அனைத்தையும் துடைத்தெறிந்து
அணையாத தீபமானார்....

இந்திய வரலாற்றில்
இவர்போன்ற தலைவரில்லை....
உலக வரலாற்றில்
இவர் போன்று யாருமில்லை

தோல்வியால் தன் கழகம்
தொடர்ந்து தோற்றாலும்
தோல்வியேத் தொடாத
தொடர்வெற்றி வீரரானார்!

வள்ளுவர் கோட்டம் தந்து
வள்ளுவர் சிலை நிறுவி
தெள்ளுதமிழ் புலவனுக்கு
கொள்ளுப்பேரன் என்றானார்!

குணம்நாடி குற்றம்நாடி
மனம்நாடி ஆராய்ந்தால்
கண்டிப்பாய் சொல்லிடலாம்
கலைஞரே உயர்வென்று!

செ. இராசா

No comments: