28/08/2018

நூல் கருத்துரை-----வேர்களின் குறுக்கு வெட்டுத்தோற்றம்


நூல் கருத்துரை
***************
கவிதை நூல்: வேர்களின் குறுக்கு வெட்டுத்தோற்றம்
நூலாசிரியர்: கரூர்பூபகிதன்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

என்னைத்தேடுகிறேன்
என்ற முதல் கவிதையிலேயே
உன்னைக் கண்டுகொண்டேன் தம்பி

எதையும் “பற்றி” இருக்கமுடியாது
என்று பற்றிய விடயங்களைப்
பட்டியலிட்டவிதமே
படிக்க தூண்டுகிறது
புத்தகம் முழுமையும்....

பற்றியதை விடாதவன் அஞ்ஞானி
பற்றியதை விடுபவன் ஞானி
பற்றியதால் வெடிப்பவன் மூடன்
பற்றியதை வடிப்பவன் கவிஞன்

பெரும் வாழ்வு என்றக் கவிதையில்
பெரும் ஞானம் தெரிகிறது....

சில்லறைக் காசுகளின் மரியாதை
சிலரின் சொற்களுக்கு இல்லை என
சில்லறை மனிதர் பற்றி எழுதிய
சிற்சில வரிகளில் அமைந்த
சிறப்பான கவிதைக்கு
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...

அடுத்தடுத்த கவிதைகளில்
அவரின் கருணை வரிகள்
பைத்தியமென அழைப்போரை
வைத்தியம் பார்க்க வைக்கிறது
ஐந்தறிவின் மீதும்
ஆறறிவின் கருணை பாய்கிறது

வக்கற்றவர்கள்
வாக்காளர்களே என
வசைபாடும் சமூகக்கவிதையில்
வரி குறைவு
வலி அதிகம்

எத்தனையோ கவிதைகள்
என்னைக் கட்டிப்போட்டாலும்
ஏனோ சில கவிதைகள்
என் மர மண்டைக்குத்தான்
ஏறவில்லை என்றால் அது
எழுதியவர் குறையல்ல...
எழுத்தை வாசித்த இந்த
எளியவனின் குறையே...

பூவரச இலை பீப்பீ
நுங்கு சக்கர வண்டி
தென்னங்கீற்று காத்தாடி....இப்படி
நாம் வாழ்ந்த காலத்தைச் சொல்லி
இப்போதுள்ள நிலை சொன்ன கவிதை
எப்போதும் யோசிக்க வைக்கும் கவிதை

மரங்கள் மனிதர்
கவிதை கடவுள்
பிணம் சாத்தான்
என்று அனைத்து தலைப்பிலும் கவிதைகள் செல்கிறது...

அதிலும் அந்த
“நாவின் ருசி” என்ற
ஒரு கவிதை போதும்
அவரின் கவித்திறமைக்கு
அட அட அட......
அவர் வரிகள் இதோ

“முதலில் பிரஜையென வளர்த்தீர்கள்
கணவனாய் போற்றினீர்கள்
தகப்பனாய் மகிழ்ந்தீர்கள்
நண்பனாய் கொண்டாடினீர்கள்
எதிரியாய்க்கூட தூற்றினீர்கள்

எல்லாமுமாகியிருந்த அவன்
சகித்திராத குடிகாரனாகிவிட்டான்
இப்போது

சந்தர்ப்பங்களுக்குள்
ருசியறிய அலைகிறது
கூர் தீட்டப்பட்ட நம் நாக்குகள்

ஏசுதலுக்கும் பேசுதலுக்கும் கூடவே”

உண்மை...உண்மை
உன்னை நீ திருத்தாமல்
உலகை நீ திருத்துவாயோ என்று
உரைக்கிறது என்னுள்ளே...
உறைகிறது மனம் கவிக்குள்ளே...

கிராம தேவதை கவிதைகளில்
கிராம வாடை மட்டுமல்ல
நீல் ஆம்ஸ்ட்ராங்கும்
ஆர்க்கிமிடிசும் வரும்போது
அறிவியல் வேர்களின்
அழகிய குறுக்கு வெட்டுத்தோற்றம்
அகத்தில் அப்படியே காட்சியானது....

நான் யார்? என்ற கவிதையில்
நான் ஞானத்தைத் தேடினேன்
ஆனால் கவிதையின் முடிவில்
அப்படியே கரைந்து விட்டேன்
ஆம்.......
அனைவருக்குள்ளும் இருக்கும்
அன்போடு கலந்த ஆற்றாமையே
அக்கவிதை பறைசாற்றுகிறது...

எங்க ஊருக்கு வராதீங்கன்னு சொல்லீட்டு
எப்படி வாழ்றோம்னு பார்க்க
வாங்கன்னு சொல்றது
அவருக்கே உரிய தனிச்சிறப்பு

கடேசியாக ஒன்று....
“வாழ்வனைத்தும் கவிதையெனில்...” என்ற வரிகொண்ட தலைப்பிடாக் கவிதைபோல்
அவர் எழுதிய அனைத்தும்
அற்புதக் கவிதைகளே எனச்சொல்லி
அகமகிழ்வோடு முடிக்கின்றேன்....

இது தமிழில் தலைசிறந்த கவிதை நூல்
இது தம்பி கரூராரின் அற்புத நூல்
இது மிகையல்ல.... உண்மை என்று கூறி
அகத்தில் மகிழ்வோடு
அன்போடு விடைபெறுகின்றேன்

இப்படிக்கு

செ. இராசமாணிக்கம்
அம்மன் பட்டி
(இ)கத்தார்

No comments: