13/04/2018

நான் எனும் மண்குடம்

அணிந்துரை
***************

எத்தனையோ பார்க்கிறோம்

எதுவும்
நிலா தரும் சௌந்தரயம்
நீட்டுவதே இல்லை

ஆனால்
இந்த நூல்
சூரியன்

எத்தனை மலரோ ரசிக்கிறோம்

எதுவும்
மல்லிகை தரும் மதுச்சத்தம்
பிலிற்றுவதே இல்லை

ஆனால்
இந்த நூல்
ராஜ ரோஜா

எத்தனையோ உணவு ருசிக்கிறோம்

எதுவும்
நெல்லுச் சோறு தரும்
நிஜமான ருசி
நெய்வதே இல்லை

ஆனால்
இந்த நூல்
களங்கமில்லாத தாய்ப்பால்

வரிவரியாக
சில பல இரவுகளைத்
தின்று செரித்து வாசித்தேன்

வாசித்தப் பிறகறிந்தேன்
என்
வாயெல்லாம் தேன்

எத்தனை எத்தனைத்
தலைப்புகள்

எத்தனை எத்தனைக்
கருத்துகள்

எத்தனை எத்தனைச்
சிந்தனைகள்

எத்தனை எத்தனை
மொழி நயம் மிகுந்தக் கவிதைகள்

சமூகச் சாடல்
மது எதிர்ப்பு
சாதீய எதிர்ப்பு
ஞானக் கவிதை
பல்சுவைக் கவிதை
விண்ணில் பறக்கும் இதயம்
சுயக் கவிதை
அரசியல் கவிதை
நட்பு பாசக் கவிதை
அப்துல்கலாம்
சேகுவேரா
பாரதீ கவிதை
தமிழ்க்கவிதை
காதல் கவிதை
இதிகாசம்
இப்படி
தலைப்புகள் பார்த்ததிலேயே
தலை வியர்த்தேன்
தமிழ் குளித்தேன்

மரபினைப் போல
மழை பெய்தக் கவிதைகளில்
மனம் நனைந்தேன்
உயிர் உறைந்தேன்

வானுரசும்
வார்த்தைகளின் வைத்தியத்தில்
தேனுரசியத் தும்பியாய்
தேகமல்ல
ஆன்மா சிலிர்த்தேன்

கவிதைப் புத்தகத்தைக்
கையெடுத்த போதே
அம்மாச்சி நிற்கிறார்
அருளாட்சியாய்

இதோ!
ராஜமாணிக்கம் வரிகள் அழைக்கிறேன்

"அம்மாச்சி என்றாலே என்
அகக் காட்சி விரியுதம்மா"

அம்மையைக் கூட
அனாதை இல்லம் விடும் நாளில்
அம்மாச்சியை நேசிக்கும்
ஆழமான இவ் அகத்தை
ஆராதிக்காமல் வேறென்ன செய்வது

இலகுவானவர் போல
ஈரமானவர் போல
என்றெண்ணி
அடுத்த பக்கம் அவிழ்த்தால்
"ரௌத்திரம் பழகு" என
ரஞ்சிதப் பூவாய்க் கூப்பிடுகிறார்

வரிகள் இதுதான்

"எங்கெங்கு காணினும் லஞ்சம் லஞ்சம்
என்றுதான் தீருமோ மக்கள் பஞ்சம்"

இந்தக் கொந்தளிப்பில்
என் அப்பன்
பட்டுக்கோட்டை
பட்டு வேட்டிக் கட்டி
நிற்பது போலவே
நினைக்கத் தோன்றுகிறது

தமிழரைப் பற்றிச்
தாகமுறச் சொல்கிற போது
"கடந்து வந்தப் பாதையினை
மறந்து விட்டத் தமிழினமே"
என்கிறார் கவிஞர்

வாசிக்கிற போதே
வழிகிறதெனக்குக் கண்ணீர்

சுதந்திர இந்தியாவின்
சூட்சமம் அறியாமல்
எப்படியெல்லாம்
இடர்பட்டுப் போயாயிற்று
நம்
இனம் என்பதறிந்து
இரத்தம் உதிர்க்கிறதென் உயிர்

இன்று நம்
தமிழ் தேசம்
தண்ணீர் இன்றி
தணலாக வேகிறதென்பது
தவிர்க்கவியலா உண்மை

அதைக்
கவிஞர் எழுதுகிறார் கேளுங்கள்

"தண்ணீர் இன்றியே நன்னெஞ்சே-இன்றும்
கண்ணீர் வடித்து நின்றோமே"

மாற்றம் ஒன்றே
மாறாத ஒன்றென்பது
மாறா உண்மையென்கிறது
மண்ணாய்ந்தத் தத்துவம்

ஆனால்
கவிஞர்
வேறுவிதமாக படம் வரைகிறார்

"மாற்றங்கள் இங்கே வருவதற்கு-நாம்
மாற்றத்தை நமக்குள் புகுத்திடுவோம்"

இந்த வரிகளில்
இறந்து போன சாக்ரடீஸ்
மாறுவேடம் அணிந்து வந்தானோ என
மருண்டு போய் நிற்கிறேன்

யாவற்றிற்கும் பதில் தர
இறைவனால் கூட ஏலாது

செயல் யாவிற்கும் விளக்கம் இட
சிறந்தவன் யாராலும் ஆகாது

ஆனால்
காலம் பதில் சொல்லும்

இதைக்
கவிதை செய்திருக்கிறார்
நம் கவிஞர்

ஊழியரின் மன ஓட்டமென்ன
உணர முடியுமா நமக்கு

கவிஞர்
களமிறங்கிப்
பதில் சுமக்கிறார் பாருங்கள்

"அடிமைப் படுத்திடும் எண்ணம் கொண்டு
அடக்கிட யாரையும் எண்ணாதே"

மட்டுமல்ல

பன்னாட்டு நிறுவனப்
பன்னாடைகளைச் சொல்லும்
வெப்பம் பாருங்கள்

"கொடுங்கோலன் ஹிட்லர் கூட
பரவாயில்லை என்பீர்"

இன்றைய பள்ளிக்கூடங்களின்
இழிவுநிலை
ஒவ்வொரு பெற்றோரும்
உணர்ந்த ஒன்றுதான்

கவிஞர் வரிகளின்
கந்தகம் பாருங்கள்

"பணத்தைப் பறிக்கின்ற பள்ளிகளில்- நல்ல
பண்பை படிக்கின்ற எண்ணமில்லை"

"பணமே குறியாய் நினையாமல்-நல்ல
படிப்பைத் தருவதே அறமாகும்'

இதை
ஒவ்வொரு வீட்டின் நெற்றியிலும்
ஒட்ட வைப்பதே சால்புடைத்து

ஆறெல்லாம்
முன்பு
ஓடம் ஓடும்

இன்றோ
லாரி ஓடுகிறது

இதில்
பவுன் சம்பாதிக்கிறது
அரசும்
அரசு சார்ந்த ரௌடியினமும்

இதைக்
கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்

" ஒரு லோடு மணலின் விலை
ஒரு பவுனுக் காசாம்"

மட்டுமல்ல

கொசு என்ற
சின்னஞ்சிறு ஒன்றால்
டெங்குவரை சென்று
இழந்த உயிர்
ஒன்றல்ல ரெண்டல்ல

அதை

"கொலை செய்யாக் கொசுவாலும்
கொசு செய்யும் கொலையாலும்
அரசுக்கே அவமானம் சேரும்'

என்ன ஒரு
சமூக அக்கறை பாருங்கள்

மதுவின் தீமையினையும்
மதுவெடுப்போர் நிலையினையும்
பொட்டிலடிக்கும்
வரி பாருங்கள்

" குடங்குடமா குடித்த பின்னே
குடி மறக்க மாலை போட்டு
குடிக்காம தான் இருந்தீக"

மாலையிட்டவர்களெலாம்
மண்டியிடும் தருணம் இது

குடி பற்றி
வள்ளுவனே
வாய் திறக்காதது
சொல்லுகிறார் பாருங்கள்

"கள்ளும் சினமும் குணத்தால் ஒன்றே
சொல்லும் நாக்கும் புரளும்"

எத்தனை
எதார்த்தமான உண்மை பாருங்கள்

அது மட்டுமல்ல
அழிக்கும் சாதி பற்றி
அவர்
அறிவிப்பதென்ன தெரியுமா

"சாதியச் சங்கம் தேவையெனில்-நம்
தமிழைச் சாதியாய் மாற்றிடுவோம்"

அடடா
கம்பன்
பாரதி
பாரதிதாசன்
காணாத சிந்தனை இது

"நான் எனும் மண்குடம்"
என்பது
கவிஞரின் தலைப்பு

பார்த்ததும்
பரிதவித்து விட்டேன்

இது
சித்தர்கள் பேசிய
ஸ்ரீஞான செய்தியாயிற்றே என

புத்தனே
அறிக்கையிட்ட
பொருள் பொதிந்த அறிவிப்பாயிற்றே என

"மட்கலம் போலவே மனிதர்களும்
மறந்தனர் கடலெனும் கடவுளையே"

பாம்பாட்டிச் சித்தரின்
பாடல் வரியொன்று
ராஜமாணிக்கம் வரிகளில்
ராட்டினம் ஆடுவதாகவே உணர்கிறேன்

உயிரின் பிறப்பை
ஒரே வரியில்
உற்பவிப்பது பாருங்கள்

"உயிரணு போட்டியின் வெற்றியிலே
உயிராய் உலகில் ஜனித்திடுவோம்"

மதம் குறித்து இவரெண்ணம்
மலைக்க வைக்கிறதெனில்
மாற்றமே இல

"மலையின் உச்சியை அடைந்திடவே
பாதைகள் பலவாய் உள்ளது போல்
மறைபொருள் உண்மை அறிந்திடவே
மத்ங்களை உலகில் படைத்தனரோ"

அடடா
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
கவிஞர் உருவில்
கருத்துச் சொல்கிறாரோ என
கவனித்து ரசிக்கிறேன் நான்

வாழ்க்கையைப் பற்றிக் கூட
வாளிப்பானச் சிந்தனையோடு
வளர்ந்தெழுந்து நிற்கிறார்
கவிஞர்

"இன்றைய தோல்வி வலிப்பதன் காரணம்
நேற்றைய வெற்றியால் துள்ளியதே"

அடப்பாவிப் பயலே

கவியரசர் கண்ணதாசனைத்
தூக்கித் தின்ன
முயற்சித்திருக்காயேடா

"கடலளவு வந்தாலும்
மயங்க மாட்டேன்-அது
கையளவே ஆனாலும்
கலங்க மாட்டேன்"

என்
ஞானத் தகப்பனின் வரிகளை
ஞாபகத்தில் கொண்டு வருகிறது
கவிஞரின்
சமகால வரிகள்

உலகவியலைச்
சொல்வது
உண்மையிலேயே
வியப்படைய வைக்கிறது

"எங்கெங்கு காணினும் நல்லவரா
என்றெனில் நீயொரு அப்பாவி
எங்கெங்கு காணினும் கெட்டவரா
என்றெனில் நீயொரு பெரும்பாவி"

இதைவிட
வாழ்வியலை யாரும்
வனைந்துவிட முடியாதென
திடமாக நம்புகிறேன்

"மதம் தாண்டிய
மனிதம் வேண்டும்"
என்பதில் புரிகிறது
அவரின்
வள்ளலார்ச் சிந்தனை

எழுதுகோல் பேசுவதாக
கவிஞரே பேசுகிறார்
கவனியுங்கள்

"கரங்கள் இரண்டாலும்
கற்களில் செதுக்குகின்ற
கல் உளியாய்ப் பிறந்தவன் நான்"

பாரதி சொன்னானே

"கவியரசு இல்லையெனும்
இழிநிலை என்னால்
கழிந்த தின்றே"

பாரதி சொன்னதைப்
பத்திரப்படுத்துகிறது
கவிஞரின் வரிகள்

அம்மன்பட்டி என்ற
அவரூர் சொல்கிற போது
ஆடைகட்டி
ஆடுகிறது அவர் தமிழ்

"பன மரத்து நுங்கு திங்க
படயோட கெளம்பிடுவோம்"

கால்சட்டைக் கால வாழ்வைக்
கண்ணுக்குள்
வரவைக்கும் கவிதை அது

மட்டுமல்ல

இதிகாசம்
புராணங்களை
எழுதிய அவர்
எளிமை கண்டு
இதயம் இனிக்க நிற்கின்றேன்

காரணம்
கர்ணனை அவர்
காட்டிய விதம்
ஆச்சரியப் பூச்சொரிவின்
அகழ்வாராய்ச்சி எனில் மிகையன்று

"நட்பென்று சொன்னாலும்
கொடையென்று சொன்னாலும்
சிந்தையிலே வரும் நாமம்
கர்ணனென்றத் திருநாமம்"

மட்டுமல்ல

சீதை
திரௌபதியை
ஒப்பிட்ட அவர் தமிழ்
உப்பின்டவரை
உடைத்துவிட இயலா ஒன்று

மகாபாரத
திருதிராஷ்டிரனை
கவிஞர் சொல்வது கேளுங்கள்

"புறக்கண்கள் மறைந்ததில்
இல்லை விசித்திரம்
அகக் கண்கள் மறைந்ததுதான்
அவன் சரித்திரம்"
என
புராணங்களுக்கே
புது உரை எழுதுகிறார் கவிஞர்

இவர் தொகுப்பு
பழமை
புதுமை
ஞானம்
கல்வி
அரசியல்
சமூகம்
இலக்கியம்
புராணப்
என
அனைத்தும் புனைந்த
அழகானப் பொட்டலப் பொக்கிஷம்

இவரெழுத்தில் உணர்கிறேன்
எதிர்காலச் சூரியன்
இடுப்பில் அமரும் நிலா
ஓடிவரும் வானம்
உடுத்தி வரும் காற்று
கையணைக்கும் பூமி
கடல் நிறைந்த நீர்

அற்புதமான
கவிதைகளின் தொகுப்பு இது

அவசியம்
ஒவ்வொருவரும்
வாசிக்க வேண்டிய படைப்பு இது

கவிதை உலகில்
இந்தத் தம்பிக்கு
இனிப்பான வெளிச்சமுண்டு

அதனால்
இப்போதே
வாழ்த்தி வரவேற்கிறேன்

தமிழ் மக்கள்
இந்தக்
கவிதை நூலை
வாங்கி
வாசித்து மகிழுமாறு
அன்போடு அழைக்கிறேன்

இந்தப் புத்தகம் படியுங்கள்

இன்னொரு பாரதி
அறிவீர்கள்

வாழ்க தம்பி.ராஜமாணிக்கம்

அன்பன்
விக்டர்தாஸ்





No comments: