10/07/2020

இசைக்கடவுள்



#இசைக்கடவுள்

எங்கே தொடங்குவேன்..
எங்கே முடிப்பேன்.
எல்லையில்லா இறைவனுக்கு
எல்லைகட்ட முடியுமா?
வானளவுக் கலைஞனுக்கு
வார்த்தை கட்ட முடியுமா?!
இருப்பினும் ஆசையுடன்
ஏற்றுகிறேன் ஓர் கவிதை...
ஏதேனும் பிழை இருப்பின்
எளியோனை பொறுத்தருள்வீர்!

இருபதாம் நூற்றாண்டின்
இரண்டாம் ஜூன் 43ல்
இராமசாமி சின்னத்தாயின்
இரண்டாம் பிள்ளையாய்
இசைவால் கருவாகி
இசையாய் உருவாகி
பண்ணைபுரம் எனும் ஊரில்
பண்ஞானி பிறக்கின்றார்!

அன்றைக்கே இராசையா
அன்னையின் கிளியானார்!
அன்னக்கிளி வந்தபின்னோ
அகிலத்தின் கிளியானார்!
ஆனால்...அற்பருக்கோ
அண்ணார் கிலியானார்!!

எத்தனையோ மேடைகளில்
எத்தனையோ கச்சேரிகளில்
கோலோச்சிய இராசையா
கோத்த முதல் இசைகானம்;
கண்ணதாசர் வரிகளிலே
கண்ணீர் பூ சாற்றியது!
அன்று முதல் இன்றுவரை
ஆத்மாவையே ஆட்டுகிறது!

இயல்புப்பா என்று சொல்லி
இந்துஸ்தானிப்பா பாடி
அப்பப்பா கொடுமை செய்த
அப்போதைய திரை இசையை
வண்ணப்பா மாறாமல்
சிந்துப்பா சிதையாமல்
சந்தப்பா எழிலோடு
சொந்தப்பா பல தந்து
இசைப்பா புரட்சியினால்
இனிப்பாய் படைத்திட்ட
இசைஞான தேசிகனார்
இசைஞானி என்றானார்!

கீபோர்டு கற்றுவிட்டால்
கூப்பாடு போடுகின்றார்!
ஒரு படம் செய்து விட்டால்
கர்த்தாபோல் கதைக்கின்றார்!
இவர்களின் மத்தியிலே
இளையராஜா இருந்தாலும்
அனைத்துக் கருவியையும்
அவரிசைக்க வைக்கின்றார்!

ஏழாயிரம் பாடல்களில்
ஏதேதோ செய்துவிட்டு
சிம்பொனி சிகரத்தில்
சித்தாந்தம் செப்புகின்றார்!

கருநாடகம் என்போர்க்கு
பஞ்சமுகி செய்துவிட்டு
ராப்பென்று குதிப்போர்க்கு
பாப்பாகி நிற்கின்றோர்!

ஏ ஆர் ரகுமானை
ஏணியாய் ஏற்றிவிட்டு
தானும் யாரென்று
தரணிக்கேக் காட்டுகின்றார்!

இறுதியாய்ச் சொல்கின்றேன்
உறுதியாய்ச் சொல்கின்றேன்
இசையென்றால் யாதென்றால்
என்றைக்கும் ஒருவர்தான்!
அவரெங்கள் இராசையா
அவரின்றி யாரையா?!!

✍️செ.இராசா

No comments: