05/07/2020

சின்னக் கவியரசர் அண்ணன் விக்டர் தாசர்



எதுகையும் மோனையுமாய்
எதேதோ எழுதிவிட்டு
தானெழுதும் அத்தனைக்கும்
வானளவில் புகழ்தேடி
தற்பெருமை கொட்டுகின்ற
தற்குறிகள் மத்தியிலே
புதுக்கவிதைச் சாயலிலே
புது விதமாய் மரபுசெய்து
அடிக்கு அடியென்று
அடிக்கடி புதுமை செய்து
முடிக்கும் வரிகளிலே
இடிபோல் அதிர வைத்து
இதுவும் கவிதையென
எண்ணுவோர் அனைவருக்கும்
இதுவே கவிதையென
இயம்புகின்ற ஓர் கவிஞர்?; அவர்

சின்னக் கவியரசர்
எண்ணப் பேரரசர்
அண்ணன் விக்டர் தாசர்
அன்பில் ஆத்ம ஈசர்!

✍️செ.இராசா

ஐந்து நாட்களுக்கு முன்பாக என் குருநாதர் விக்டர்தாஸ் அண்ணா எழுதிய #குச்சி என்ற கவிதை. அவர் பெயர் இல்லாமலே இந்தியா அமெரிக்கா,துபாய்,கத்தார்.......என் உலா வந்தது அவருக்கேத் தெரியாமல்.

பாருங்கள்... இதுதான் இணையம்...இங்கே இப்படியும் உண்டு.

எது எப்படியோ அண்ணாவின் கவிதை வரிகளை நீங்களும் படித்துப் பாருங்கள். அது நீள்கவிதை அல்லது கஜல் இரகம். தற்சமயம் இந்த வடிவம் எழுதுபவர்கள் அண்ணாவைத்தவிர யாரும் இல்லை எனலாம்‌.

ஈரோடு புத்தகக் கண்காட்சி 2018 நிகழ்வில் பார்த்திபனை வைத்துக்கொண்டே அவரின் வரிகளை இப்படி யாரோ ஒருவரின் வரிகள் என்றே சத்தியராஜ் சொல்லி முடிப்பார். பின்னர் அவ்வரிகளின் உரிமையாளன் தான் என்றும் அவை எழுதிய புத்தகத்தையும் பார்த்திபன் குறிப்பிடுவார்.

அந்த வரிகள் இவையே...

"வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம் செத்துத் தொலையலாமே..
செத்துதான் என்ன செய்யப்போகிறோம் வாழ்ந்தே தொலையலாமே..‌‌"

இப்படி... எண்ணங்களும் வரிகளும் உலாவிக்கொண்டுதான் இருக்கின்றன. எழுதியவரின் அடையாளம் இல்லாமலேயே.....

(தயவுகூர்ந்து மற்றவர் கவிதைகளை உருவும் போது அவர்களின் பெயர்களையும் சேர்த்து உருவுங்கள்.....)

செ.இராசா

குச்சிக் கவிதையை அண்ணணின் குரலில் கேளுங்கள்

https://youtu.be/LpSTsTgRVrw

No comments: