22/02/2019

வாழிய செம்மொழி செந்தமிழே



தகரத்தில் தங்கமாய் ‘த’ எடுத்து
மகரத்தில் மிடுக்காய் ‘மி’ எடுத்து
ழகரத்தின் சிறப்பாய் ‘ழ்’ எடுத்து
‘தமிழ்’மொழி என்றே ஆனவளே- நீ
தமிழினம் தந்தத் திருமகளே!

ஆதியில் அகத்தியம் ஆகிநின்று
அருந்தொல் காப்பியம் உடன்தந்து
இரண்டடிக் குறளில் உலகளந்து
கம்பனில் காவியம் ஆனவளே- நீ
கவிக்கொரு பாரதி தந்தவளே!!!

தேனிலும் இனிய வாசகமாய்
தேடியும் கிடைக்கா மந்திரமாய்
பாடியும் முடியா பாவினமாய்
தமிழில் ஒலிக்கிற இன்னிசையே-நீ
தீந்தமிழ் என்கிற மெல்லிசையே!!

மரபிலே கவிதைகள் பலதந்து
மரபணு மாற்றியே பின்வந்து
புதுப்புதுக் குறுங்கவி கோடிதந்து
முற்றிலும் பற்றிடும் நற்றமிழே-நீ
முற்றியும் முற்றா பொற்றமிழே!

வாழிய எம்மொழி எந்தமிழே!!!
வாழிய செம்மொழி செந்தமிழே!!!

✍️செ. இராசா

No comments: