11/02/2019

ஒற்றைப் புள்ளி


ஒற்றைப் புள்ளியில்
எப்போதோ பொதிந்த
முந்தையப் பதிவுதானே
இந்தைய மானிடப் பிறவி..

ஒற்றைப் புள்ளியில்
எப்போதோ வெடித்த
அந்தப் பெரியபிரளயம்தானே
இந்தப் பேரண்டப் பிறவி..

ஒவ்வொரு புள்ளியும்
ஒவ்வொரு வட்டமெனில்
ஒவ்வொரு வட்டமும்
ஒவ்வொரு புள்ளிதானே..

ஒவ்வொரு சூரியனும்
ஒவ்வொரு விண்மீனெனில்
ஒவ்வொரு விண்மீனும்
ஓவ்வோரு புள்ளிதானே..

புள்ளிகளின் கைகோர்ப்பில்
புலனாகும் கூட்டணிதானே
ஒவ்வொரு நேர்கோடும்

புள்ளிகளின் கைகோர்ப்பில்
புலனாகும் உருவம்தானே
ஒவ்வொரு ஒளிப்படமும்

எழுத்தின் ஆரம்பம்
எப்போதும் துவங்குவது
ஒற்றைப் புள்ளியில்தானே

எழுதும் வாக்கியங்கள்
எப்போதும் முடிவது
ஒற்றைப் புள்ளியில்தானே

முன்னூற்று அறுபது பாகையும்
முழுதாய் அமைவது
ஒற்றைப் புள்ளியில்தானே

உலகின் நபர்களும்
உடலின் செல்களும்
ஒவ்வொரு ஒற்றைப் புள்ளிகள்தானே

புள்ளிதானே என எண்ணாதீர்...
புள்ளியின் இடம்பொறுத்தே
எண்களின் மதிப்பு...

புள்ளியை பூஜ்ஜியமாய் இகழாதீர்
புள்ளியைப் புரிந்தவனுக்கே
பூவுலகில் மதிப்பு

காவல் துறையில் கரும்புள்ளி
கவன அடையாளம்

மங்கை நெற்றியில் வரும்புள்ளி
மங்கள அடையாளம்..

குழந்தையின் கன்னப்புள்ளி
திருஷ்டியின் அடையாளம்..

பொருள்களின் அணுப்புள்ளி
சிருஷ்டியின் அடையாளம்...

இங்கே...
நீயும் நானும் ஒற்றைப்புள்ளியே
அவனும் அவளும் ஒற்றைப்புள்ளியே
அதுவும் இதுவும் ஒற்றைப்புள்ளியே
அட...அனைத்தும் ஒற்றைப்புள்ளியே

https://youtu.be/ztIPiC8-nUg

✍️(((.))) செரா

No comments: