14/03/2018

கண்ணப்ப நாயனார்


பன்றிக்கறி படையலிட
பற்றிய கரங்களோடு;
உச்சிக் கொண்டையிலே
அர்ச்சிக்க மலர் சுமந்து;
உப்பிய வாயினிலே
அபிடேக நீர் சுமந்து,
தினம் தினம் அன்போடு
திண்ணனும் பூசித்தான்!

சைவக் கடவுளுக்கு
அசைவத்தில் படையல் செய்து
பக்திப் பரவசத்தில்
பரமனோடு கொஞ்சி நின்றான்!

ஆண்டவனின் கண்ணொன்றில்
பொங்கிவந்த குருதிகண்டு
பச்சக் குழந்தைபோல
பதறியே ஓடிச்சென்று
பச்சிலை பறித்துவந்தான்!
பதமாய் சாறு விட்டான்!

குருதியும் நிற்கவில்லை!
குழப்பமும் தீரவில்லை!

கண்ணுக்கு கண்ணென்றே-
திண்ணனும் எண்ணியதால்- தன்
கண்ணைக் குத்துகின்றான்- சிவன்
கண்ணில் பொருத்துகின்றான்!

இறையின் குறை ஒன்று
இன்றோடு போனதென்று
இனியவன் மகிழயிலே;
இறைவனின் மறு கண்ணில்
இறங்கிடும் குருதிகண்டு
இம்முறை துளியளவும்
இவனுக்குள் அச்சமில்லை!

அடையாளம் அறிவதற்கு
ஆண்டவனின் விழியருகே
அவன் காலை வைக்கின்றான்!

அவன் கண்ணை குத்திடவே
அவசரத்தைக் காட்டுகின்றான்!

அப்பா! அப்பப்பா!
போதும்பா! கண்ணப்பா!

ஆண்டவன் அலறிவிட்டான்!
அவன் அன்பில் ஆடிவிட்டான்!

----செ. இராசா---------

No comments: