28/03/2018

ஓரு வேண்டுகோள்



பிள்ளை வரைந்த ஓவியத்தை- சரி
இல்லையென யாம் சொல்வோமா?-இல்லை
ஆகா அருமை எனச்சொல்லி- அவை
நோகா வார்த்தைகள் சொல்வோமா?!

விளைந்திடத் துடிக்கும் பயிர்களை-நாம்
முளையில் கிள்ளுதல் சரிதானா?- அஃதே
எழுதிட முயன்றிடும் புதியவரை- நாம்
ஏளனம் செய்வதும் முறைதானா?

குறைகளைக் களைவது தவறில்லை-வெறும்
குறைகளாய்க் காணுதல் தவறாகும்- அஃதே
நிறைகளைப் புகழ்வது தவறில்லை- ஆனால்
நிறையவே புகழ்வது தவறாகும்!

எழுதிடும் அனைத்தும் கவிதையென்று- சிலர்
எண்ணிடும் கருத்தும் சரியில்லை!- அஃதே
எடுத்துச் சொல்லிடும் கவிஞர்களை-சிலர்
எள்ளி நகைப்பதும் சரியில்லை!

எண்ணத்தை எழுத்தாய் மாற்றிடுவோம்- நம்
எண்ணம்போல் நாமும் உயர்ந்திடுவோம்- நம்
எழுத்தில் புதுமை கண்டிடுவோம்- நாம்
எழுதிடும் முறைமையைப் பயின்றிடுவோம்!

—- செ. இராசா—-

(அன்பு அண்ணா கவிஞர். விக்டர்தாஸ் அவர்களுடன் நேற்று உரையாடியபோது
கவிதைபற்றிப் பேசிய கலந்துரையாடலின்
கவிதை வடிவம் இது)

No comments: