12/12/2017

எத்தனை எத்தனை உறவுகள்?



வெள்ளை வேட்டி வெளுத்துத்தந்து
வெடுக்குன்னு காசவாங்கி
வெவரமாக வச்சிக்கிட்டு
வெள்ளந்தியா சிரிச்சுகிட்டே....
பழைய சோறு கேட்கும் அந்த
பாசக்கார அக்கா எங்கே?

அப்பா வரலையான்னு
அன்போட பேசிக்கிட்டே
அரைகிலோ கறியோட
கால்கிலோ எழும்புவச்ச
கறிக்கடை பாய் மாமா
காணாமல் போனதெங்கே?

கவுத்திவச்ச சட்டியொன்னு
கழுத்து மேல வைச்சதுபோல்
சிரிச்சுக்குட்டே முடிவெட்டி
சிரத்தை சேதம் செஞ்சாலும்
ஐயா ஐயான்னு பேசும் அந்த
ஐயா இப்ப போனதெங்கே?

காசும் எதுவும் வாங்காம
கணக்கு எதுவும் வைக்காம
கடலைமிட்டாய் சேர்த்துத்தரும்- அந்த
கடைக்கார மாமாதான்
காணாமல் போனதெங்கே?

செவ்வாய் வெள்ளி பூஜை செய்ய
செவ்வந்தி மாலை கட்டி
கசங்காம இருக்கணும்னு
காகிதத்த மேல சுத்தி
வாசமாய் மணம் இருக்க
பாசமாய் மனசு வச்ச
பூக்கார அம்மாதான்
புதிர்போல போனதெங்கே?

----------------------
-----------------------
எத்தனை எத்தனை உறவுகள்?
எல்லாம்தான் போனதெங்கே?

----செ. இராசா-----

No comments: