19/12/2017

73வது வார கவிச்சரம் நிகழ்ச்சியில் நான் எழுதிய கவிச்சரம்


அன்பு நண்பர்களே நான் தலைமையேற்று கலந்துகொண்ட கவிச்சரம் என்ற #தமிழ்ப்பட்டறை நிகழ்ச்சியில்
நான் பதிவேற்றிய இரு கவிதைச் சரங்களை (தலைமை கவிச்சரம் மற்றும் நிறைவுச்சரம்) இங்கே தருகின்றேன்.

73வது வார தலைமைக் கவிச்சரம்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தமிழ்த்தாய் வணக்கம்:
***********************
அறம் பொருள் இன்பம் சொல்லி
அறிவுக்கண்ணை திறந்து வைத்த
தமிழ்மறையை நமக்குத்தந்த
தலைமகனைப் பெற்றெடுத்தத்
தமிழ்த்தாயை வணங்குகின்றேன்!
தமிழ்கொண்டே வணங்குகின்றேன்!

அவை வணக்கம்:
****************
கம்பனைப் பெற்றடுத்த
கவித்தாயின் மனம்குளிர
கவிதைகள் பலசெய்து
கவிச்சரம் தொடுக்கின்ற
கவிஞர்களின் அவைதனை
கரமுயரத்தி சிரம் தாழ்த்தி
கனிவோடு வணங்குகின்றேன்!

தலைப்பு : இலக்கிய விழா
*************************
நடந்துவந்த பாதையிலே
கடந்துவந்த பெருமையினை
இலக்கியத்தால் அறிவதினால்
இலக்கியத்தைப் போற்றிடுவோம்!

தற்காலம் சிறப்பதற்கும்
பொற்காலம் அறிவதற்கும்
எடுத்தியம்பும் இலக்கியத்தை
எந்நாளும் போற்றிடுவோம்!

இலக்கியத்தைக் கொண்டாடும்
இலக்கிய விழாக்களினை
நாள்தோறும் நடத்திடுவோம்!
நாம்சிறக்க வாழ்ந்திடுவோம்!

உப தலைப்புகள் :
*****************

கலை நிகழ்ச்சிகள்:
*******************
கண்களுக்கும் செவிகளுக்கும்
காண்போர் அனைவருக்கும்
களிப்பினை அள்ளித்தரும்
கலைநிகழ்ச்சி நடத்திடுவோம்!

இயல் இசை நாடகத்தால்
இனிமையான நிகழ்ச்சிதந்து
கவிதைபோல் இனிமைதரும்
கலைஞர்களை வாழ்த்திடுவோம்!

சிறப்பு விருந்தினர்கள்
***********************
விழாவினைச் சிறப்பிக்கும்
விழாவின் விருந்தினர்கள்
விழாவினில் மகிழ்ச்சியுற
விழாக்களை நடத்திடுவோம்!

கருத்தரங்கம்
*************
உயர்ந்த உண்மைக் கருத்துகளை
உலகம் உய்வுறும் என்றறிந்தால்
உரத்த குரலில் சொல்லிடுவோம்!
உலகம் உயர்வுற உதவிடுவோம்!

கருத்துகள் பிறரைச் சேர்வதர்க்கும்
கருத்தினால் கருத்தினை வெல்வதற்கும்
கருத்தின் அரங்கங்கள் அமைத்திடுவோம்
களங்கள் அதுவென உணர்த்திடுவோம்!

கவியரங்கம்
************
மொழியின் செழுமையினை
மொழிகின்ற கவி சொல்லும்!
மொழியின் ஆழத்தினை
மொழிகின்ற கவி சொல்லும்!

கவிஞர்களின் பெருமையினைக்
கவியரங்கக் கவி சொல்லும்!
கவியரங்கக் கவிஞர்களை
கவியுலகம் தினம் சொல்லும்!

பட்டி மன்றம்
*************
சொல்லும் சொல்லை அழுத்திச் சொல்லி
வெல்லும் சொல்லை எடுத்துச் சொல்லி
சொல்லோடு சொல்லை மோதச் செய்து
சொல்லால் வெல்லுமாம் பட்டிமன்றம்!

அதுவும் இதுவும் மோதும் பொழுதில்
அதுவே சரியென எண்ணும் பொழுதில்
இதுவும் சரியென எண்ணச் செய்து
அறிவை எழுப்புமாம் பட்டிமன்றம்!

ஆன்மீகச் சொற்பொழிவு
**********************
உள்ளுக்குள் உரைந்துள்ள ஞானத்தை
உசுப்பிட உதவிடும் ஞானிகளின்
சொற்களைக் கேட்கின்ற அரங்கத்திலே
செவிகளுக் கின்பம் குறைவுண்டோ?

உண்மையில் ஞானத்தை வழங்குகின்ற
உயர்ந்த மனிதரின் வார்த்தைகளால்
ஆன்மா விழிப்புற வில்லையெனில்
அதனால் யாதும் பயனுண்டோ?!

அழைப்பு
*********
கவிச்சரம் தொடுத்திடுவோம்
வாருங்கள் நண்பர்களே.....!
கவிச்சரம் தொடுத்திடுவோம்
வாருங்கள் கவிஞர்களே.....!

############################################################
73-வது வார நிறைவுச்சரம்
############################################################

தமிழ்த்தாய் வணக்கம்
***********************
அன்றுமுதல் இன்றுவரை
அழகியல் குறையாமல்
திங்கள்போல் ஒளிவீசும்
தமிழ்மொழியின் கால்களிலே
மனத்தாலும் மொழியாலும்
மகிழ்வோடு வணங்குகின்றேன்.

அவை வணக்கம்
**************************
அறிவியலின் அற்புதமாய்
ஆர்ப்பரிக்கும் இணையத்திலே
தமிழர்களை மேம்படுத்தும்
தளமாகத் திகழ்கின்ற
தமிழ்ப்பட்டறைக் குழுமத்தினை
தலைகுனிந்து வணங்குகின்றேன்.

இலக்கிய விழா
****************
அரங்கங்கள் நிறைந்ததினால்
அயோத்தி சிறந்ததென்று
நாட்டின் சிறப்புப்பற்றி
கம்பரும் கூறுகின்றார்!

எவ்வினத்தின் பெருமைகளும்
எவ்வினத்தின் செழுமைகளும்
அவ்வினத்தின் இலக்கியத்தால்
அகிலத்திற்கு அறியவரும்!

வந்த வழி அறிந்திடவும்
போகும் வழி தெரிந்திடவும்
இலக்கிய மன்றங்களே
இலக்கணம் சொல்லித்தரும்!

கலைநிகழ்ச்சிகள்
********************
ஆடலும் பாடலும்
அழகாக இருந்தாலும்
ஆபாசம் நுழைந்துவிட்டால்
அருவருப்பு ஆகிவிடும்!

களிப்போடு கருத்திருந்தால்
கலைநிகழ்ச்சி தேனாகும்!
களிப்பு மட்டும் தனித்திருந்தால்
புலன்கள் மட்டும் சுகமாகும்!

சிறப்பு விருந்தினர்கள்
***********************
கருத்தோடு தொடர்புடைய
கருத்துள்ள விருந்தினரை
அழைத்துவரும் பொழுதினிலே
அனைவருக்கும் மகிழ்ச்சிவரும்!

அறிவுப்பசி தீர்க்கின்ற
அற்புத விருந்தினரை
அழைத்துவரும் பொழுதினிலே
ஆனந்தம் அகத்தில் வரும்!

கருத்தரங்கம்
**************
எக்கருத்து என்றாலும்
உட்கருத்து சரியென்றால்
வரவேற்று வாழ்த்துகின்ற
மாண்புள்ள சபையரங்கம்
மகிழ்வான கருத்தரங்கம்!

அதிகமான கருத்தரங்கம்
அகிலமெங்கும் கூட வேண்டும்!
தனிமனிதத் தூற்றுதலும்
தற்பெருமைக் கூற்றுகளும்
தவிர்த்திடவே முயலவேண்டும்!

பட்டி மன்றம்
**************
ஒத்திகை செய்துவந்த நாடகம்போல் இல்லாமல்
ஓடுகின்ற வாழ்க்கைக்கு ஒத்துவரும் கருத்தோடு
ஒப்பற்ற வாழ்வுபெற உதவுகின்ற கருத்தோடு
ஒழுங்குடன் நடக்கின்ற பட்டிமன்றம் சிறப்பாகும்!

ஆன்மீகச் சொற்பொழிவு
**************************
ஆன்மீகக் கருத்தோடு அறிவியல் கருத்திணைத்து
தற்கால இளைஞர்களும் ஏற்கின்ற வழியறிந்து
அறிவினை வழங்குகின்ற ஆன்மீகச் சொற்பொழிவில்
பிறர்வழியை குறைசொல்லா மாண்பு(ம்) வேண்டும்!

கவியரங்கம்
*************
கற்கோவில் கோபுரமும்
சொற்கோவில் காவியமும்
தமிழ்மொழியின் பெருமை சொல்லும்
தனித்துவ அடையாளங்கள்!
காலத்தின் பதிவுகளைக்
காவியமாய் பதிந்தால்தான்
காணாமல் போகாமல்
காலமெல்லாம் வாழ்ந்திடலாம்!

தீர்ப்பு:
********
இலக்கியத்தின் உச்சபட்சம்
இருக்கின்ற கவிதையெல்லாம்
பிறக்கின்ற இடமாக
கவியரங்கம் இருப்பதினால்
கவியரங்கம் உயர்வென்ற
தீர்ப்பினையே வழங்குகின்றேன்!

நன்றி நவில்தல்:
*********************
எத்தனையோ கவிஞர்கள்
எழில்கூட்டிய மேடையிலே
எளியோனாம் அடியேனை
ஏற்றிவிட்ட நண்பர்களுக்கும்,

தலைவர் திரு. சேக்கிழார் அப்பாசாமி ஐயா அவர்களுக்கும் ...
சகோதரர் திரு. சேதுமாதவன் அண்ணா அவர்களுக்கும் ..
சகோதரி திருமதி. முல்லை நாச்சியார் அவர்களுக்கும் ..
சகோதரர் திரு. புருஷோத்தமன் அவர்களுக்கும்
சகோதரர் திரு. சத்திய சீலன் அவர்களுக்கும்
சகோதரி திருமதி. ஜெயபாரதி அவர்களுக்கும்,
உயிர் நண்பர் திரு. சிவக்குமார் நாச்சியப்பன் அவர்களுக்கும் மற்றும்
கவிச்சரம் தொடுத்த அனைத்து கவிஞர்களுக்கும்
என் உளமார்ந்த நன்றியினை காணிக்கை ஆக்குகிறேன்..

மேலும், சென்னை, திருப்பூர், திருவள்ளூர், திருவாரூர், மதுரை......என கிளைகள் பலபரப்பி
தமிழறம் விதைக்கின்ற
தமிழ்ப்பட்டறைத் தளத்தினையும்
மனமார வாழ்த்துகின்றேன்.

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
https://www.facebook.com/photo.php?fbid=2028115350740892&set=gm.1949742412011332&type=3&theater&ifg=1

No comments: