19/12/2017

அன்பெனும் மழையிலே


84வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் கவிதை எழுத எமக்கு வாய்ப்பளித்த திரு.சேக்கிழார் அப்பாசாமி அய்யா அவர்களுக்கும், முதல் இடத்திற்கு அடியேனின் கவிதையை தேர்வு செய்த நடுவர் திரு. கோபிநாத் ஐயா அவர்களுக்கும் மற்றும் ஊக்கம் தந்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அன்பெனும் மழையிலே
***********************
அண்டத்தில் ஆயிரம் இருப்பு கண்டீர்!
அன்பினில் சிறந்தது யாது கண்டீர்?!
அன்பெனும் மழையிலே நனைந்து பாரீர்!
அன்புதான் ஆனந்தம் என்றே சொல்வீர்!

அன்னையர் கொள்கின்ற பிள்ளை பாசம்
அன்பினில் உச்சத்தை என்றும் சொல்லும்!
அன்னியர் என்கின்ற மனதின் எண்ணம்
அன்பினால் உடைவது என்றும் திண்ணம்!

அடுத்தவர் வேதனை உணரும் தருணம்
அழுதிடும் கண்ணீரில் கடவுள் வருவான்!
அஹிம்சையால் அகிலமே மகிழும் தருணம்
அதர்மத்தின் உருவமும் கடவுள் ஆவான்!

அன்பின் எல்லைகள் விரியும் நேரம்
அகிலமே இறைவனின் ரூபம் ஆகும்!
அன்பின் எல்லைகள் சுருங்கும் நேரம்
அகிலமும் இறைவனும் சூனியம் ஆகும்!

அன்புள்ள காதலர் பிரியும் நேரம்
அற்புதம் அதிசயம் பதரெனத் தோன்றும்!
அன்புள்ள காதலி கொஞ்சும் நேரம்
அற்பமும் சொற்பமும் பொன்னெனத் தோன்றும்!

அன்புள்ள நண்பரின் உறவுகள் என்றும்
ஆயிரம் யானையின் பலமாய்த் தோன்றும்!
அன்பெனும் மழையிலே நனைந்தோர் நெஞ்சம்
ஆயிரம் ஆயிரம் நண்பராய்த் தோன்றும்!

—செ.இராசா—


https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1948833668768873/

No comments: