31/05/2017

அம்மன் பட்டி- சொந்த ஊர் நினைவுகள்





 

தாவரங்கள் இடம்பெயர
தாவரத்தின் வேர்களிலே
தாய்மண்ணை சேர்த்திடுவர்!
அதுபோல இடம்பெயர்ந்த
அடியேனின் மனவேரில்
அடிமண்ணாய் பதிந்துள்ள
அழியாத நினைவுகளை
ஆசையோடு எழுதுகின்றேன்!

சட்டை எதுவும் போடாமல்
சத்தம்போட்டு கத்தி நாங்க
ஊரைச் சுத்தி வந்திடுவோம்....
ஒடி ஆடி திரிஞ்சிடுவோம்....

கிட்டிப்புல்லும் கிரிக்கெட் பந்தும்
அடிச்சு பார்த்தால்....தெறிச்சோடும்
பம்பரமும் கோலிக்குண்டும்
பார்த்தாலே...கை உருட்டும்....

மொலத்திண்ணை மேல நாங்க
ஓ..... என்று கூச்சலிட்டு
கல்லைவச்சு ஆடிடுவோம்.......ஆனால்
கள்ளாட்டம் ஆடமாட்டோம்.

பனைமரத்து நொங்கு திங்க
படையோட கிழம்பிடுவோம்...
பறிச்சநொங்க வெட்டிவச்சு
போட்டிபோட்டு குடிச்சிடுவோம்...

மாடுமேய்க்கும் தோழனோட
மத்தியான வேலையில
மாமரத்து கிளை மேல
மாங்குயிலே ..... பாடிடுவோம்....

வயக்காட்டு கிணத்துக்குள்ள
வரிசையாக மேலநின்னு
அந்தர் பல்டி அடிச்சிடுவோம்!
அம்மணமா குளிச்சிடுவோம்!

கண்மாய் அழியும் சேதிவந்தால்
முதல்ஆளா கிழம்பிடுவோம்......
மீன்பிடிக்க மறந்திடுவோம்...
பெருமை மட்டும் பேசிடுவோம்

மாட்டுவண்டி பூட்டிநாங்க
ஆறுமுகம் ஐயாவோட...
நெல் அறைக்க போகும்போது
குச்சி ஐஸ் வாங்கி திங்க
பழைய இரும்ப தேடிடுவோம்...

ஊருணியும்....கண்மாயும்...
வாயிருந்தால் அழுதிருக்கும்....

எழந்தப்பழம்...நாவல்பழம்...
எச்சிஊரும்....பனைம்பழம்
எதையும் நாங்க விட்டதில்லை...

ஊத்துத்தண்ணிய குடிச்சாலே
எந்தநோயும் ஓடிப்போகும்.

காத்து கருப்பு பயமென்றால்
ஆத்தாகாளிய நினைச்சுக்குவோம்..

எங்க ஊரு பிள்ளையாரு
எல்லாருக்கும் முதல் சாமி....
பொங்கல் ஊரில் வந்ததுமே
எங்கள் ஊரே பரபரக்கும்....

அங்காளியும் பங்காளியும்....
பட்டணத்து பாப்பாக்களும்....:
சிங்கப்பூர் சித்தப்பாக்களும்.....
வெளியூர்வாழ் அதிபர்களும்......
வந்ததுமே.....களைகட்டும்

சாமியாட்டம்.....மாடுஓட்டம்...
நடக்கும் ஒருபக்கம்...
சண்டைவந்து மண்டை உடையும்
அதுவும் ஒருபக்கம்....

அரசமரப் பஞ்சாயத்து
அடுத்த நாளில் நடக்கும்....
இரண்டு நாளு போச்சுதுன்னா
கூட்டம் ஓட்டம் எடுக்கும்.,

ஊரே எங்க வீடுதாங்க....
எல்லாருமே சொந்தந்தாங்க...
சாதி மதம் பார்க்காமல்
சமத்துவமா வாழ்ந்தமுங்க.....

காசு பணம் தேவைக்காக
ஊரை விட்டுப் போனாலும் ....
உசுரு மட்டும் உள்ளவரை
மனசு பேசும் மண்ணின் வாசம்.....

No comments: