14/05/2017

நன்றி(டா) அப்பா



பிறந்தநாள் விழாவொன்றில்
பிள்ளைகள் மகிழ்வுறவே
பற்பல நிகழ்ச்கசிளை
படிப்படியாய் அங்கேற்றினர்....

அங்கிருந்த பிள்ளைகளோ
ஆர்வத்தின் மிகுதியாலே
ஆனந்தக் கூத்தாடினர்....,
ஆசையோடு என்மகனும்
ஆடிடவே எண்ணமுற்று
எம்கரத்தை பற்றியங்கே
ஏக்கமான பார்வையோடு
'வாங்கப்பா' என்றழைக்க!

என்ன செய்ய? ஏது செய்ய?
என்றே நான் தயங்கி நிற்க!
என்னவளோ ஏற்றிவிட்டாள்
ஏறிவிட்டேன் மேடையிலே..

சோழபுரம் பள்ளியிலே
கோலாட்டம் ஆடியுள்ளேன்
அதைத்தவிற இதுவரையில்
ஆடவில்லை மேடையிலே!

கூட்டத்திலே ஒருவனாக
ஆட்டத்திலே குதித்துவிட்டேன்
ஆச்சரியம் என்னவென்றால்?!
ஆடியதில் சிறந்தவரில்
அடியேனும் உண்டாமாம்...!!!

அகத்தினிலே சிரித்துவிட்டேன்
அப்படியே அடக்கிவிட்டேன்

சந்தோச மனத்தோடே
சிரிப்பான முகத்தோடே
அலையெல்லாம் அடங்கியதும்
அமைதியான இடமொன்றில்
வந்தமர்ந்த எம்மகனின்
வாய்மொழியை யாதுரைப்பேன்?!

'நன்றி அப்பா வந்ததற்கு'
என்றேதான் சில வார்த்தை
உதிர்த்தானே அன்போடு...
உளமாறக் கூறியதில்
உறைந்துவிட்டேன் அப்படியே.....

உண்மையிலே நானும்தான்
அவனாலே வளர்கின்றேன்

நன்றிடா அப்பா உமக்கும்

No comments: