24/05/2017

சீதையும் திரௌபதியும்- ஓர் ஒப்பீடு





மண்ணில் தோன்றிய சீதையும்
நெருப்பில் உதித்த திரௌபதியும்
பாரதம் போற்றிடும் காவியங்களின்
பாத்திரப் படைப்பின் நாயகிகள்!

------------------------------------------------------

வில்லினை உடைக்கும் போட்டியிலே
வீரத்தைக் காட்டிய இராமனையே
வெற்றியின் பரிசாய் மாலையிட்டு
சூரியகுலம் புகுந்தாள் சீதையம்மா!

வில்வித்தை சுயம்வரப் போட்டியிலே
வீரன் விஜயனை மாலையிட்டு
விதியால் ஐவரை மணந்திடவே
சந்திரகுலம் புகுந்தாள் திரௌபதித்தாய்!

----------------------------------------------------------

பதியுடன் கழித்த வனவாசம்
பதிமூன்று ஆண்டுகள் முடிந்தவுடன்
சிறையினில் கழிந்தது ஓராண்டு!
சிறியோன் இராவணன் செயலாலே!

ஐவருடன் ஒருவராய் வனவாசம்
பனிரெண்டு ஆண்டுகள் முடிந்தவுடன்
மறைந்து வாழ்ந்தது ஓராண்டு!
சதிகார சகுனியின் செயலாலே!

----------------------------------------------------------

இலட்சுமணக் கோட்டைத் தாண்டியதால்
இலக்கை அடைந்தான் இராவணனே!
இச்செயல் வினையின் விளைவாக
இழந்தாள் இன்பம் ஜானகியே!

தடுக்கி விழுந்த துரியோதனனை
விடுக்கென உதவிட நினையாமல்
படக்கென சிரித்திட்ட செயலாலே
பட்டாள் துயரம் பாஞ்சாலி!

----------------------------------------------------------

பிறன் மனையாளை கரம்பிடித்து
பிடித்தே இழுத்த பாவிகளில்
பத்துத் தலையோனும் மடிந்தானே!
புத்திகுறை தம்பியும் மடிந்தானே!

----------------------------------------------------------

இராம இராஜ்ஜிய பேரரசி
இராம நீதியின் பெயராலே
கானகம் சென்றாள் துயரோடு!
கடேசியில் புதைந்தால் மண்ணோடு!

பாண்டவர் வெற்றியை பெற்றாலும்
பாஞ்சாலி பிள்ளைகள் அழிவாலே
வாடியே விழுந்தாள் தானாக!
வாழ்வும் கழிந்தது நெருப்பாக!

----------------------------------------------------------

இதிகாசப் புராணங்கள் இரண்டிலுமே
இன்னல்கள் இருவரும் அடைந்தாலும்
இரும்பாய் இதயம் கொண்டதாலே
இருகரம் கூப்பி வணங்கிடுவோம்!

No comments: