07/12/2022

சட்டை

 

அரைக்கை சட்டை
முழுக்கை சட்டை
பொத்தான் வச்ச சட்டை
பொத்தானே இல்லாத சட்டை
பருத்தி சட்டை
பட்டுச் சட்டையென்று
சட்டைகளாய் வாங்குகிறோமே
சட்டையின் வரலாறுபற்றி என்றாவது
சட்டை செய்திருக்கிறோமா?!
 
நம் மன்னர்கள் உட்பட
முன்னோர்கள் யாரும்
சட்டையே போட்டதில்லையாம்..
சந்தேகமெனில்...
தஞ்சாவூர்வரை வந்த
மார்க்கோபோலாவைக் கேளுங்கள்...
 
அட..
அவ்வளவு ஏங்க...
அடிக்கிற வெயிலுக்கு
சட்டை எதுக்குன்னு
சட்டை போடாத நம்மாள பார்த்து
சட்டையே போடமாட்டேன்னு
சட்டையைத் துறந்தாரே காந்தி...
அதை என்ன சொல்றீங்க?
 
ஆங்கிலேயன் வந்ததும்
அங்கி மட்டுமா வந்துச்சு?!
சாதிக்கு உள்ளேயும்
சட்டை வந்துச்சு...
 
ஒருத்தன் சட்டைய மேல போட்டால்
அவன் மேலயாம்...
அவனே சட்டைய அக்குள்ள வச்சால்
அவன் கீழயாம்... 
 
இவ்வளவு ஏன்?
சில சாதிப்பெண்கள் சட்டைபோட
வரி கேட்ட வரலாறு தெரியுமா?
 
எப்படித் தெரியும்?
 
பண்டிகைக்கு மட்டும் சட்டை தச்ச
நமக்கே தெரியாதப்ப
பணமிருந்தாலே சட்டை வாங்குற
நம்ம பசங்களுக்காத் தெரியப்போகுது?
 
✍️செ. இராசா

No comments: