05/12/2022

ஔவைத் திங்கள் - 19 (உன்னையே நீ அறிவாய்)

 


தன்னை உணராமல் தற்குறிபோல் பேசுபவர்
தன்னால்தான் வீழ்வர் தனித்து!
(1)
 
அகத்தவம் செய்யாமல் ஆர்ப்பரிக்கும் பேர்க்கு
சகம்போகும் போக்கு தவறு!
(2)
 
தன்குடும்பம் தானென்று தன்னெல்லை தாண்டாதோர்
முன்னேறிச் செல்லார் முயன்று!
(3)
 
அன்பை விரிக்க அகிலத்தை நேசிக்க
தன்னைப் பழக்கும் தவம்!
(4)
 
சங்கரர் சொன்னதும் சாக்ரடீஸ் சொன்னதும்
தங்களைத் தானறிதல் தான்!
(5)
 
மோனத்தில் உட்கார்ந்து மூலத்தை ஆராய்ந்தால்
ஞானவொளி காட்டும் வழி!
(6)
 
வந்தவழி எண்ணி வரும்வழியை சீராக்கி
அந்தவழிச் செல்லல் அழகு!
(7)
 
தானே பெரிதென்று தம்பட்டம் செய்பவர்கள்
வீணே எனப்போவர் வீழ்ந்து!
(8)
 
தன்னை மதியார்முன் தானென்றும் செல்லாமல்
தன்நிலையில் நிற்றல் தரம்!
(9)
 
தன்னை மதியாமல் தானே நடந்துகொண்டால்
என்செய்வர் மற்றோர் இயம்பு?!
(10)
 
✍️செ. இராசா

No comments: