20/09/2021

அறிவு

அது இருக்கா இது இருக்கா
என்றால் வராத கோபம்
அறிவிருக்கா என்றால் வருகிறதே ஏன்?
 
அழகு குறைந்தோன்
வசதி குறைந்தோன்
என்றால் வராத கோபம்
அறிவு குறைந்தோன் என்றால் வருகிறதே ஏன்?
எனில்
அறிவு அவ்வளவு முக்கியமா?!
 
ஆம்...
அறிவை வைத்துதானே
அனைத்தையும் வகுக்கிறோம்!
 
ஒவ்வொரு புலனுக்கும்
ஒவ்வொரு அறிவாய்
ஓரறிவு முதல் ஆறறிவு வரை
அகிலமே இங்கு
அறிவுசூழ் கூட்டம்தானே..
 
அறிவில்தான் எத்தனை அறிவுகள்?
பட்டறிவு
பகுத்தறிவு
மெய்யறிவு
பொய்யறிவு
உள்ளறிவு
புல்லறிவு....என
அப்பப்பா....!!!
 
ஆமாம்...
அறிய அறிய அறிவதென்ன?!
அறிவின் எல்லையை
அறிய முடியாது என்பதுதானே...
 
இங்கே...
அறிவு மிகு
கூகிள் பிச்சைக்குத்தானே
அத்தனை கோடி சம்பளம்‌
கூகுள் பே பிச்சைகளுக்கில்லையே..
 
அறிவு மிகு
ஐன்ஸ்டீன்களால்தானே
இத்தனை கோடி மாற்றம்
பொய் கூறும் பேடிகளால் இல்லையே..
 
அறிவே தெய்வம் என்கிறார் பாரதி!
அறிவுக்குக் கோவில் கட்டியுள்ளார் வேதாத்திரி!
ஆதியே அறிவென்கிறார் ஔவையார்!
மெய்யுணர்தலே அறிவென்கிறார் வள்ளுவர்!
அறிவே அனைத்தும் என்றாலும்
அறமில்லா அறிவு
ஆபத்தில் முடிகிறதே...
 
உண்மைதான்..
அறிவுமிகு சமூகம்
அறிவின்றி நடப்பது ஆபத்தே..
ஆனால்..
அறிவு மிகு சமூகத்தை அறிவதெப்படி?
 
அதை அறியத்தானே அகழ்வாராய்ச்சி..
கீழடி
பொருநை
ஆதிச்சநல்லூரென
ஆதி நாகரிகத்தின் அடையாளம்
#தமிழ் என்றறிந்தும்
#ஆங்கிலம் பேசினால் "#ஆ" வென்போரே..
மன்னிக்கவும்...
 
✍️செ. இராசா
 
(தமிழை ஆங்கிலத்தோடு கலப்பதை முடிந்தவரைத் தவிருங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏)

No comments: