17/09/2021

நந்தனார் கதை----நேரிசை வெண்பாவில்

 


#நந்தனார்_கதை
#நேரிசை_வெண்பாவில்

#அறிமுகம்

பார்ப்பான் பறையனென
.....பார்த்தோரால் அந்நாளில்
நேர்ந்த பலவற்றை
......நேர்நின்று- பார்ப்பதுபோல்
கோர்த்த புராணத்தில்
...... கூறிய நற்கதையில்
ஈர்த்த ஒருகதையே இது!

#நந்தி_விலகிய_நிகழ்வு

"நந்தி விலகியதாம்
.........நந்தனார் பாடியதால்"
முந்தைக் கதையிதனை
........முற்போக்கில்- சிந்தியுங்கள்!
குந்தி இருந்தசிவன்
.........கோவிலுள் செல்லாமல்
முந்தித் தடுத்தவர்யார் முன்பு?!

#சிதம்பரம்_போகத்_தடை

சிதம்பரம் போகிற
.........சிந்தையை நீக்க
முதன்முதல் கூறிய
.........முட்டாள்- அதர்மியை
ஏனென அன்றே
.........எவரேனும் கேட்டிருந்தால்
தானென நிற்பரா சொல்?!

#அடிவாங்கிய_நந்தனார்

அடிக்க அடிக்க
.....அடியெல்லாம் வாங்கி
அடித்தகை நோகுமென
.....அன்பாய்- வெடித்தவிதம்
காந்திபோல் ஏசுபோல்
.....கண்முன்னே நிற்கின்ற
மாந்தர்போல் நந்தனார் மாண்பு

#எத்தனை_சோதனைகள்?

நெல்லை விளைவிக்க
.......நேராய் சிவன்வந்தும்
சொல்லை நனவாக்க
.......சொப்பனத்தில்- சொல்லியும்
தில்லை பிராமணர்க்காய்
‌.......தீக்குள்ளே உட்புகுந்தும்
அல்லல் பொறுத்தாயே அன்று!

#முடிவு

இறையை அடைய
‌.........எடுத்த முயற்சி
இறையின் செவியில்
.........இனிதே- பறைய
இறையே இரங்கி
.........இறங்கி வரவே
இறையின் அருகே இடம்!

அறுபத்து மூவரில் ஐயமின்றி இன்றும்
அறுக்கிறார் சாதி அழுக்கு

✍️செ. இராசா

எழுதத் தூண்டியவர்: நண்பர் முனைவர் திரு பாலமுருகன் ஐயா🙏

No comments: