20/09/2021

அனுபவத்தின் விலை ஆயிரம் ரூபாய்

 



சமீபத்தில் நான் பெரிதும் விரும்பும் பேச்சாளர்களில் ஒருவரான சொல்வேந்தர் திரு‌. சுகி சிவம் ஐயா அவர்களின் மூன்றுநாள் பயிற்சியில் கலந்து கொண்டேன். எனக்கு அத்தலைப்பு பற்றி எந்த சந்தேகமும் இல்லாதபோதும் ஐயா அவர்களிடம் நேரலையில் பேசும் வாய்ப்பு கிடைக்கிறதே என்று விரும்பித்தான் கலந்து கொண்டேன். ஆழியாறு போனபோது ஐயா அவர்களுடன் சேர்ந்து புகைப்படமெல்லாம் எடுத்துள்ளேன். இருந்தாலும் இதில் கலந்து கொண்டு பேசவேண்டும் என்கிற ஆர்வம் அதிகமாக இருந்ததால் 1000 ரூபாயை இந்தியாவில் என் நண்பன் சிவா மூலமாகக் கட்டச்சொல்லி சேர்ந்துகொண்டேன். அதில் பெற்ற அனுபவத்தையே இங்கு பகிர்கின்றேன்.
 
1. புலனக் குழு இதற்கென உருவாக்கி சரியாக வழிநடத்தினாலும் அவர்களின் பேச்சு ஆங்கிலம் கலந்த தமிழிலேயே (TANGLISH) இருந்தமை எமக்கு முதல் அதிர்ச்சி அளித்தது.
 
2. முதல் நாள் மற்றும் இரண்டாம் நாட்களில் ஒன்றரை ஒன்றரை என்று மொத்தம் மூன்று மணிநேரம் நடந்த வகுப்பில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட காணொளியைப் பகிர்ந்தார்கள். அதில் பாதி நேரடி ஆங்கிலமாக இருந்தமை இரண்டாவது அதிர்ச்சி அளித்தது. காரணம் நான் கலந்து கொண்டது தமிழ் வகுப்பு. என்மேல் ஆங்கிலம் வலிய திணிக்கப்பட்டமை, நம்மவர்கள் எப்படி உள்ளார்கள் என்பதையே காட்டுகிறது. மேலும், சுகி சிவம் ஐயா அவர்களே ஒரு காணொளி போடும்முன் எளிய ஆங்கிலம்தான் என்று சமாதானம் சொல்கிறார்கள். (ஆகா...என்னே ஒரு விளக்கம்)
 
3. மூன்றாவது நாளில் அவர் அளித்த நேரலைப் பேட்டியில் இக்குறைகளைப் பேசலாம் என்று நினைத்தாலும், குறைகளை நேரடியாகச் சொல்வது நன்றாக இருக்காது என்பதால் புலனத்தில் பேசி அனுப்பி வைத்தேன். எந்தப்பதிலும் வரவில்லை.
 
4. யோசித்துப் பாருங்கள் ஒரு வகுப்பில் 220+ பேர்கள் கலந்து கொண்டார்கள். ஒரு நபருக்கு 1000/ என்றால் 2,20,000/ரூபாய் வருகிறது. ஒரு தமிழ்ப்பேச்சாளர் இணைய வழியில் இவ்வளவு பணம் சம்பாதிப்பது தமிழுக்குக் கிடைத்த பெருமையே என்றாலும் தமிழ் இல்லாமல் ஆங்கிலமும் கலப்புத் தமிழும் இருந்தால் அது எப்படித் தமிழ் நிகழ்வாகும்?! 
 
5. இப்போதும் சொல்கிறேன் அவரை சிறுமைப் படுத்துவது எம் நோக்கமல்ல. ஆனால், அவரே இப்படி நடந்து கொண்டால் மற்ற வருங்காலப் பேச்சாளர்கள் எப்படி நடப்பார்கள். ஏற்கனவே வானொலி தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழை தமிங்கிலமாக்கிக் கெடுப்பது போதாதா?!!
 
ஒன்று மட்டும் தெளிவாகிறது. இவ்வளவுக்கு இடையிலும் பணம் வாங்காமல் சேவை செய்வோரின் சொற்களை மதிப்பிட்டால் எத்தனை கோடிகள் வரலாம். ஆனால் நாம் அவற்றையெல்லாம் எவ்வளவு உதாசீனம் செய்கிறோம்.
சிந்திப்போம்!!!
 
✍️செ. இராசா

No comments: