15/09/2021

குறளந்தாதி உரையாடல்------குறளுரையாடல்----கரு: பொது



#நான்_1
சார்ந்தோர் தவறிழைத்தால் சாந்தமாய் பார்ப்பதே
சார்புக் கவிஞனின் சான்று

#தம்பி_2
சான்றை விரும்பாது தானாய்த் திருந்துவதே
ஆன்றோர் வழிவந்த அன்பு.

#நான்_3
அன்பில்லா மூடரே ஆள்வார்கள் என்றானால்
நன்மையா தோன்றும் நவில்

#தம்பி_4
நவிலும் அனைத்தையும் நல்லோர் உணர்வர்
தவிர்ப்பவர் எல்லாம் தவறு.

#நான்_5
தவறைத் தவறென்று தன்நெஞ்சில் கண்டு
தவறைச் சரிசெய்தல் சால்பு

#தம்பி_6
சால்புடை நெஞ்சமும் சாக்கடை யாகியே
கால்நடை யானதைக் காண்.

#நான்_7
காண்பவை யாவுமே காட்சிப் பிழையாமாம்
கோன்சரி யென்பாரின் கூற்று

#தம்பி_8
கூற்றின் படிநடக்கும் கூட்டம் உளதெனில்
போற்றும் தினமிப் புவி.

#நான்_9
புவியாள்வோர் சொல்கின்ற பொய்க்கூற்றைக் கூட
கவியாள்வோர் போற்றுவதைக் காண்

#தம்பி_10
கண்டேன் கலியுகத்தில் கள்வர் வளர்ச்சியினைக்
கொண்டேன் வியப்பும் கொதித்து.

#நான்_11
கொதித்து வருகின்ற கோபத்தை எல்லாம்
பொதிந்த படைப்பால் புடை

#தம்பி_12
புடைத்தும் படைப்பில் பொதிந்தும் மனத்துள்
விடைகள் கிடைக்கா வினா.

#நான்_13
வினாக்கள் தொடுத்து விடையென்ன என்றால்
வினாதான் தொடுப்பார் விரைந்து

#தம்பி_14
விரைந்து வருபவர் விட்டுவி டாமல்
உரைப்பர் பிழையெலாம் உற்று.

#நான்_15
உற்றுத்தான் பார்க்கிறார் உள்ளபடி யாதென்று
கற்றுத்தான் கொள்வதில்லை கண்டு

#தம்பி_16
கண்டும் கடக்கின்ற கண்கள் முகநூலில்
உண்டு விடுத்ததை ஓங்கு.

#நான்_17
ஓங்கி உரைக்கின்றேன் உள்ளத்தில் ஓர்ந்ததை
வாங்கி நடப்போர்க்கென் வாழ்த்து

#தம்பி_18
வாழ்த்தும் மனமெல்லாம் வாழ்வாங்கு வாழட்டும்
மூழ்கி யெடுக்கலாம் முத்து.

#நான்_19
முத்துக்கள் எல்லாம் முகம்முன் இருக்கையில்
வெத்துக்குப் போயா விருது?

#தம்பி_201
விருதை விரும்பா விரல்கள் படைப்பைத்
தருதாம் தமிழினைச் சார்ந்து.

✍️தம்பி ஆனந்துடன் நான்

No comments: