22/06/2017

நிறங்களில் பேதமில்லை/ மதங்கள் என்பது யாது?


இறைநிலை ஒன்றை அறிந்திடவே
இருக்கின்ற மதங்கள் முயல்கிறது!
முன்னோர் காட்டிய பாதையிலே
முனைந்தே மதங்கள் செல்கிறது!


மலையின் உச்சியை அடைந்திடவே
பாதைகள் பலவாய் உள்ளதுபோல்
மறைபொருள் உண்மையை அறிந்திடவே
மதங்களை உலகில் படைத்தனரோ?!

பாதையும் பயணமும் வேறெனினும்
குறிக்கோள் ஒன்றே இலக்காகும்!
மதங்களும் மறைகளும் வேறெனினும்
இறைநிலை ஒன்றே முடிவாகும்!

தன்வழிப் பாதையே அறியாதோர்
பிறர்வழிப் பாதையைத் தீதென்பார்!
தன்குறை எதுவெனத் தெரியாதோர்
பிறர்குறை உள்ளதாய் போதிப்பார்!

கடல்நீர் நீலமாய்த் தெரிந்தாலும்
நீருக்கு நிறங்கள் கிடையாது!
கடவுளை மதங்கள் கூறினாலும்
மதமே கடவுளாய் ஆகாது!

No comments: