07/06/2017

தவறாய்ப் பேசினால் தவறில்லை/ ஆங்கிலம் சாத்தியமே


அகிலத் தொடர்பின் மொழியான
ஆங்கிலம் அறிவது அவசியமே!
ஆயினும் அம்மொழி அறியாதோர்
அதையொரு குறையாய் நினையாதீர்!

பள்ளியில் கற்காப் பிறமொழிகள்
சீக்கிரம் சரளமாய் பேசுகையில்
பள்ளியில் படித்த ஆங்கிலத்தை
பிறரிடம் பேசிட தயங்குவதேன்?

அதிகம் தெரிந்தே இருந்தாலும்
அதுஏன் பேசிட வருவதில்லை?
அதற்கு காரணம் மொழியில்லை
அவசியம் இல்லா பயவுணர்வே!

அடுத்தவர் பேசிடும் ஆங்கிலத்தில்
குறைகள் சொல்லிடும் வழக்கத்தை
ஆங்கில நாட்டினர் கொள்ளவில்லை!
அதைஏன் நம்மவர் உணர்வதில்லை!

நூறு வார்த்தைகள் தெரிந்தாலே
எம்மொழி ஆயினும் பேசிடலாம்!
வார்த்தைகள் அதிகம் தெரிந்தாலும்
வேகமாய் பேசிடத் தயங்குவதேன்?!

உயர்வு தாழ்வு எண்ணங்களால்
உள்ளத்தின் வார்த்தைகள் வருவதில்லை!
ஆங்கிலம் பேசினால் உயர்வாக
ஆழ்மனம் சொன்னால் அழித்திடுவீர்!

தவறாய்ப் பேசினால் தவறில்லை!
தடுமாறிப் பேசினால் தவறாகும்!
அலட்சிய மனதுடன் பேசிடுவோம்!
அறிந்தால் தவறைத் திருத்திடுவோம்!

சித்திரம் வரைவது கையாலே!
சிந்தனை தெரிவது மொழியாலே!
சூத்திரம் எதுவும் தேவையில்லை
சூழ்நிலை அமைந்தால் சாத்தியமே!

No comments: