25/08/2022

திருச்சிற்றம்பலம்

 





என் மனைவியார் இந்தப்படத்திற்குப் போகலாம் என்றபோது, சற்றே யோசித்துதான் சம்மதித்தேன். படம் மாலை 6:00 மணி என்று முன்கூட்டியே போனால், படம் 7:00 மணிக்கே என்றார்கள். சரி பரவாயில்லை 4 டிக்கெட் போடுங்கள் என்றேன். அங்கே அரங்கில் யாருமே முன்பதிவு செய்யவில்லை என்று காட்டியதால், படம் சரி இல்லையோ என்கிற சந்தேகம் எழுந்தது. நண்பர் ஒருவருக்குப் போன்செய்து இடம் காலியாக உள்ளது வருகிறீர்களா என்றால், அவர் தன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலர் படம் அப்படி ஒன்றும் சரி இல்லை என்றார்களாம். தாங்கள் பார்த்துவிட்டு கூறுங்கள் என்று சொன்னார். ஆகா...வசமா மாட்டிக்கிட்டோம்போல என்கிற மனநிலையில்தான் படம் பார்க்கப் போனேன்.
ஆனால், படம் போன போக்கும், அதில் நடித்த அனைத்து ஜாம்பவான்களின் அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பும் எங்களைக் கட்டிப்போட்டதென்றே சொல்லலாம். ஆக... விமர்சனங்களைப் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டாம் மக்களே... (இதில் நான் எழுதும் விமர்சனமும் சேரும்தான்😊😊)
 
சென்னையில் நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் இவரின் முதல் படமான #துள்ளுவதோ_இளமை வந்தது. அந்தப்படத்தை ஏறக்குறைய ஒரு நீலப்படம் பார்க்கும் மனநிலையில்தான் போரூரில் உள்ள திரையரங்கில் பயந்து பயந்துபோய் பார்த்து வந்தேன். அதன்பிறகு #காதல்_கொண்டேன், #திருடா_திருடி, அப்புறம் #புதுக்கோட்டையிலிருந்து_சரவணன்.....என அவர் நடித்த படங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து, அவர் தேசிய விருது வாங்கிய #அசுரன் வரை பட்டைய கிளப்பியது என்றால் அவரின் கடுமையான உழைப்பே காரணம். அந்த வகையில் இந்தப்படத்திலும் மிகப் பிரம்மாதமாக தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் நடிப்பு மட்டுமல்ல, அவர் குரல் வளத்தில் வருகின்ற பாடல்களும் தனி ரகம்தான். இதிலும் நன்றாகப் பாடியுள்ளார்.
 
 
சொல்லவே வேண்டாம். நடிகர் ரகுவரன், ராஜ்கிரண் ஆகிய தனித்துவமான நடிகர்கள் வரிசையில் பிரகாஷ்ராஜும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. இப்படத்தின் பாதியில் பக்கவாதம் வந்த நிலையில், இயற்கை உபாதைக்காக அப்பாவை அழைத்து, கட்டிலில் இருந்து கீழே விழுந்து தன் வேட்டியை சரி செய்ய முடியாமல் திணறும் காட்சி ஒன்றே போதும். அப்பப்பா.....செம்ம.
 
 
எவ்வளவு பெரிய இயக்குநர் இவர். அவரை நடிக்க விடாமல் ஒரு தாத்தாவாகவே வாழ வைத்துள்ளார் இந்தப் படத்தின் இயக்குநர். ப்பா.... கடைசியில "#என்_இனிய #தமிழ்_மக்களே...." என்று இவர் மூலமாக படத்தின் மையக் கருவைச் சொல்ல வைப்பதெல்லாம்...வேற வேற ரகமான சிந்தனை.
 
தனுஷோடு போட்டி போட்டு தனுஷை மட்டுமல்ல ஒட்டுமொத்த ஜாம்பவான்களையும் விஞ்சும் அளவில் நடித்துள்ளார். இவரைக் கவர்ச்சியாகப் பயன்படுத்தாமல் நடிப்பால் வெளிப்படுத்தியத் தன்மைக்கும் இயக்குநரை வாழ்த்தியே ஆக வேண்டும்.
வாழ்த்துகள்
திரு. #மித்ரன்_ஜவகர் அவர்களே...
 
வர வர....தலைவர் பின்னணி இசையில் பட்டையக் கிளப்புகிறார். தனுஷ் பேசும் ஒரு நீண்ட வசனத்திற்கு வருகின்ற பின்னணி இசை ஒன்றே போதும்‌....அவரின் இசை முதிர்ச்சிக்கு.
 
எல்லாம் வழக்கமான கதைதான், ஆனால், இதில் சொன்ன விதம் புதுமை. பொதுவா, பெண்களை வைத்தே நகர்த்தும் காட்சிகளில் எல்லாம் ஆண்கள் வந்து அசத்துவது வித்தியாசமான அணுகுமுறை. குறிப்பாக, நித்யா மேனனின் தம்பி தன் அக்கா கனடா போகும்போது பேசுவது, தனுஷிடம் இறுதியில் தன் அக்கா பற்றி பேசுவது போன்ற காட்சிகள் எல்லாம் மிகவும்
அருமையாக
இருந்தது.
அப்பக் குறையே இல்லையா?...
இருக்கு..எனனதான் தாத்தாவும் பேரனும் நண்பர்கள் போல இருந்தாலும் அடிக்கடி வீட்டில் அமர்ந்து தண்ணி அடிக்கும் காட்சிகள் எல்லாம் சமூகத்தை மேலும் சீரழிக்க வைக்கும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதை மட்டும் தவிர்த்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் இப்படம் ஆகச் சிறந்த படம்....

No comments: