31/08/2022

நண்பர் சிவாவின் புதுமனைப் புதுவிழா வாழ்த்துகள்

 


#வாழ்த்துகள்_நண்பா (நண்பர் சிவாவின் புதுமனைப் புதுவிழா மற்றும் மகன் பேகனின் காதணிவிழா சிறக்க இனிய மனமார்ந்த
வாழ்த்துகள்)

பிறந்தகம்* விட்டகலும்
.....பெண்பிள்ளை போலே
பறந்தின்று போகின்ற
.....பால்ய- உறவால்
சிறகை இழந்ததுபோல்
.....சிக்குண்ட தாலே
உறக்கம் வரவில்லை யே!
(1)
 
*பிறந்தவீடு
தந்தையும் தாயுமாய்
.....தன்னையேத் தந்தநீ
எந்தைபோல் நின்ற
.....இறையருள்- விந்தையடா
கூட்டைத் துறந்தால்
.....குயிலின்றிக் கூடுபடும்
பாட்டைப் ப(பா)டுகின்றேன் பார்‌!
(2)
 
உடலோர் இடமாய்
.....உயிரோர் இடமாய்
கடலைக் கடந்தும்
.....கதைத்தேன்- திடமாய்
வலிகள் எதுவும்
......வரவில்லை நண்பா..
வலியேனோ இன்று வருது!
(3)
 
இருவரும் ஒன்றாய்
.....இணைந்தே இருக்க
ஒருவீடு கட்டி
.....ஒருங்கே- இருக்க
முடிவொன்று செய்தே
.....முயன்றோம் இருந்தோம்
முடிந்ததா நண்பா முடிவு?!
(4)
 
கண்ணில் அருவி
.....கவியாய் வருகினும்
உண்மையில் உன்மேல்
.....ஒருபிழை- கண்டிலேன்
காலம் விடுக்கும்
.....கணக்கைப் புரிந்தவர்
ஞாலத்தில் யார்தான் இயம்பு?!
(5)
 
வள்ளுவம் சொல்கின்ற
.....நட்பியல் கூற்றுகளை
உள்ளபடி கொண்டுள்ள
.....உன்போன்ற- கள்ளமிலா
நல்லவனை நானறியேன்!
.....நல்லவனா நான்?அறியேன்!
வல்லவனாய் வாழயெம் வாழ்த்து!
(6)
 
எல்லாம் சிவமயம்
......என்றவனைச் சொல்வதுபோல்
எல்லாம் சிவாமயம்
......என்றிவனைச்- சொல்லுவதேன்?!
எல்லா இடங்களிலும்
.....எல்லாமாய்ப் போயங்கு
சொல்லாமல் நிற்பான் துணைக்கு!
(7)
 
சந்தான லெட்சுமியின்
.....சத்திய நாயகனாய்
சுந்தருக்கும் பாரதிக்கும்
.....சோதரனாய்- தந்தையாய்
நற்றமிழ் நாச்சியப்பர்
.....நல்கிய மைந்தனாய்
சுற்றமுடன் என்றும்வாழ் சூழ்ந்து!
(8)
 
பேர்போற்றும் மைந்தமையப்
.....பேகனெனப் பேரிட்டாய்
ஊர்போற்றும் வீடமைய
.....உள்ளத்தில்- வேரிட்டாய்
பார்போற்றும் வாழ்வமைய
.....பைந்தமிழை நேர்வைத்தே
சீர்போற்ற வாழ்த்துகிறேன் சேர்ந்து!
(9)
 
எத்தனையோ செய்துவிட்டாய்
.....என்னவென்று சொல்லிடுவேன்?!
புத்தனைப்போல் புன்னகைப்பாய்
.....பொய்யின்றி- சத்தியமாய்
இன்னலுறும் போதெல்லாம்
.....இன்சொல்லால் தீர்ப்பவனே..
நன்றியுடன் வாழ்த்துகிறேன் நான்!
(10)
 
✍️செ. இராசா

No comments: