27/08/2022

நேரிசை வெண்பாவில் ----------- வந்தியும் குந்தியும்

 


(கத்தாரில் நாங்கள் புதிதாய் வாங்கிவந்த ஆண் கிளியான வந்தி என்னும் வந்தியத்தேவனும் பெண் கிளியான குந்தி என்னும் குந்தவையும் என்ன பேசுகிறார்கள் என்று பாருங்களேன்)
 
ஏய்புள்ள குந்தி!
.....இதக்கொஞ்சம் கேளுபுள்ள
வாய்கிழிய கத்துறவன்
.....வந்துட்டான்- ஓய்ஓய்னு
ராகமே இல்லாமல்
.....ராத்திரியில் பாடிடுவான்
வேகமாத் தூங்கிடலாம்
.....வா!
 
ஆமாம்யா வந்தி!
.....அதுபோல்தான் அம்மணியும்
சீமான்போல் எப்போதும்
.....சீறுகிறாள்- தாமாக
சப்தமின்றி பேச
.....சகலரும் கற்கலையோ?!!
எப்படித்தான் வாழ்வோமோ
.....இங்கு?!
 
சிரியாவில் தோன்றி
......சிறகடித்தோம் வானில்
தெரியாமல் சிக்குண்டோம்
......சேர்ந்தே- விரிவலைக்குள்
பற்றிய நம்மைப்
......பறக்கவிட்டார் கூண்டுக்குள்
குற்றமென்ன செய்துவிட்டோம்
.....கூறு?
 
நம்வானில் சுற்றியது
......நாம்செய்த தப்பாசொல்?!
நம்மைச் சிறைபிடித்த
......நன்றியில்லா- நம்மக்கள்
கூடிப் பறந்தநம்மைக்
......கூடுவிட்டு நாடுவிட்டு
வாடி வதங்கவிட்டார்
......வந்து!
 
கத்தாரில் வந்தவுடன்
.....கத்திக் கதறியபின்
செத்துப் பிழைத்ததினால்
......தித்திக்க- முத்தமிட்டோம்
வானம் சுருங்கியபின்
......வாழ நினைத்தாலும்
ஊனம்போல் வாழும்
......உயிர்!
 
கண்ணாடிப் பாப்பாவால்
.....கைமாறி இங்குவந்தோம்
அண்ணாவும் தங்கையும்
.....அன்பானோர்- உண்மையிலே
ஐயாவும் அம்மாவும்
.....அப்பப்போ கத்தலைன்னா
மெய்யாலும் இவ்வீடு
.....மேல்!
 
இந்தாள் இருக்கார்ல...
.....ஏதோ கவிஞராம்
அந்தாள் ஒருவேளை
.....அன்போடு- சிந்தித்தால்
நம்ம இருவரையும்
.....வானத்தில் விட்டிடலாம்
அம்மணி ஏற்குமா
.....அங்கு?
 
கட்டறுத்தால் தான்நான்
.....கவிஞனென ஏற்றிடுவேன்
கட்டுண்டு நின்றால்
.....கவிஞனில்லை- கட்டாயம்
விட்டு விடுவித்தால்
......வீரமுள்ள நற்கவியாய்
பட்டம் கொடுப்போம்
.....பறந்து!
 
பட்டம் புகழென்றால்
......பல்லிழுப்போர் தானதிகம்
கெட்ட பயபுள்ள
......கேட்பானோ?!- கட்டாயம்
விட்டாப் பறந்திடலாம்
...... வேகமாய் நம்நாடு
திட்டம் இதுதான்நற் தீர்வு!
 
விடுதலை வேண்டுமென்றே
.....விட்டுவிடக் கேட்போம்!
விடுவிக்க வில்லையெனில்
.....மீண்டும்- கெடுவைப்போம்!
காந்திபோல் உண்ணாமல்
.....காத்திருப்போம் என்றுரைப்போம்!
ஏந்தி உயிர்துறப்போம் இங்கு!
 
✍️செ. இராசா

No comments: