08/08/2022

உழவும் உயிரும் ----------- ஔவைத் திங்கள் - 003



உழுதுண்டு வாழ்வோர் உயர்வார் என்றீர்
அழுதுண்டு வாழ்கின்றார் ஏன்?
(1)

உற்பத்தி செய்யும் உழவர்கள் கீழிருக்க
விற்பவர்கள் எப்படி மேல்?
(2)

கடனுதவி தந்தாலும் கையில்;ஏன் இல்லை
நடைமுறைச் சிக்கல் நவில்.
(3)

செய்யும் பொருளுக்கு செய்வோனைக் கேட்காமல்
பொய்யாய் விலைவைப்போர் யார்?
(4)

உழவனைக் கொன்றபின் ஊணெங்கேக் கிட்டும்
இழவுதான் தீர்வா இயம்பு.
(5)

நீருக்காய்க் கையேந்தி நின்றிடும் முன்னாலே
மாரிநீர் போனதெங்கே சொல்.
(6)

உழுவுந்து வாங்கவும் ஒன்றுமே இல்லார்
விழுவதுதான் தீர்வா விளக்கு.
(7)

பணமுள்ளோன் தானா பணம்படைப்பான் இங்கே?
உணவளிப்போன் என்னாவான் ஓது!
(8.)

விளைநிலம் எல்லாம் விலைமனை ஆனால்
விளைவென்ன வாகும் விளக்கு.
(9)

வரிகளாய்ப் போட்டு வதைத்திடும் முன்னே
உரியவழி என்ன உரை.
(10)

✍️செ. இராசா

No comments: