04/07/2022

#பாவலர் அகரம் அமுதன் அவர்கள் பற்றிய ஓர் பார்வை

 



பெரியோரைக் கண்டு
வியக்க வேண்டாமென்றான்
கணியன் பூங்குன்றனார்...
காரணம்...
வியந்துபோய் விட்டால்
அப்படியே தேங்கிவிடுவோம் என்பதற்காக..
 
ஆயினும்..
சிலரைக்கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை..
அப்படி யாம் வியந்து பார்க்கும் மனிதர்களில்
பாவலர் அகரம் அமுதன்
சமீபத்தில் முன்னிலையில் நிற்கிறார்...
என்றால் அது மிகையல்ல...
 
பொதுவாக ஒரு மனிதனை
அவனின் அப்போதைய நிலையில் வைத்தே
அனைவரும் விமர்சிக்கின்றோம்...
யாருமே பின்னோக்கிப் பார்ப்பதில்லை..
காரணம்....
யாருக்கும் அதற்கான நேரமும் இல்லை...
 
அப்படி புரிந்துகொள்ளப்படாத
அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட
ஆகச்சிறந்த கவிஞர்களில்
அகரம் அமுதனும் ஒருவரென்றே நினைக்கின்றேன்.
 
அவரின் வெண்பா வேகத்திற்கு
அவரோடு போட்டிபோட
அவரால்தான் முடியுமென்றால்
அது வெறும் புகழ்ச்சியல்ல
அவரின் உண்மையான ஆற்றல்...
 
ஆனால் அப்படிப்பட்ட மனிதர்
ஆங்கிலம் கலந்த வெண்பா எழுதுகிறாரென்றால்
விமர்சனம் வராமலா இருக்கும்....
எழுந்தது... படுவேகத்தில் எழுந்தது
எழுப்பியதில் சில மிதவாதிகளும் உண்டு
பல தீவிரவாதிகளும் உண்டு..
(நானும்தான்)
 
ஏன் அப்படி படைக்கிறார் என்பதற்கு
அவரிடம் ஆயிரம் காரணங்கள்..
அதையெல்லாம் விடுவோம்.
அது மட்டும்தான் அவர் உயரமா?
இல்லை...
இல்லவே இல்லை....
இதை யாம் உணர
அவரின் இரு புத்தகங்கள் தேவைப்படுகிறது..
 
ஒன்று மாவீரன் பிரபாகரனைப் போற்றி
சீமான் அவர்கள் அணிந்துரை எழுத
ஆஸ்திரேலிய உறவுகளின்
அற்புதமான பங்களிப்பால் வெளியிடப்பட்ட
தனித்தமிழ் வெண்பா இலக்கியம்
மற்றொன்று
குழந்தைகளுக்கு வழிகாட்டும் விதமாய்
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள்
அணிந்துரை வழங்க
இலக்கியத் தோழர்கள் பங்களிப்பில் வந்த
தனித்தமிழ் குறள் வெண்பா நூலுமே சாட்சி..
 
இவையெல்லாம் வெறும் 15 நாட்களில்
உருவாக்கியுள்ளார்...
அதுவும் தற்போதல்ல..
2011 ஆம் ஆண்டில்..
 
ஒன்று சொல்லுங்கள்....
ஒரு நூலை நாமாகக் கோர்த்து
நாமே வெளியிடுவது பெருமையா?
இல்லை,
அந்நூலை நமக்காக
பிறர் வெளியிடுவது பெருமையா?
 
எனில்
எது அவர்களை அப்படிச் செய்யவைத்தது
சந்தேகமே இல்லை...
அவரின் தமிழல்லாமல் வேறென்ன?!
 
இரண்டு நூல்கைளயும் படித்தேன்
மிரண்டு போனேன்...
அவரின் உயரம்...
என்னில் இருந்து
பல கிலோமீட்டர் உயர்ந்து பார்க்கிறேன்...
பல கிலோமீட்டர் வியந்து பார்க்கிறேன்...
 
அப்படிப்பட்ட அவர் ஏன் மாறினார்?
மாறாமல் இருக்க அவரொன்றும் குளமல்ல..
எனில் யாரவர்?
ஒவ்வொரு கணமும் மாறும் ஆறவர்..
 
மாறுவார்....மீண்டும்..‌
நாம் பிடித்தால் நனைவோம்.‌.
இல்லையேல் ஒதுங்கி நிற்போம்...
 
✍️செ. இராசா

No comments: