17/07/2022

மனிதர்களைப் படிக்கிறேன்-1 --------- ஓலா ஓட்டுநர்

 


நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் நமக்கு ஒவ்வொரு பாடத்தைப் புகுத்திவிட்டுத்தான் போகிறார்கள். நாம்தான் அதை எங்கேயும் ஆவணப்படுத்தாமலே கடந்துவிடுகிறோம். அந்தவகையில், நான் சந்தித்த புதிய நபர்களின் சுவாரஸ்யமான விடயங்களைப் பற்றிய பதிவே இது.
 
கடந்த ஜூலை 7 ஆம் தேதி, சென்னையில், அண்ணா நகரில் இருந்து நீலாங்கரை செல்ல ஓலாவில் சிறிய மகிழுந்து ஒன்றை வாடகைக்கு எடுத்தேன். அழைத்த மூன்று நிமிடங்களில் மகிழுந்து வந்துவிட்டது. அந்த ஓட்டுநரின் பேச்சை வைத்தே நீங்கள் மதுரை பக்கமா என்றேன்? ஆமாம் சார்... அருப்புக்கோட்டை என்றார். அதன்பிறகு நான் என்னைப்பற்றி அறிமுகப்படுத்திவிட்டு அவரைப்பற்றி கேட்டேன். அவரின் வாழ்க்கை வெகு சுவாரஸ்யமாக இருந்தது. 
 
அதாவது, அவர் முன்பு அருப்புக்கோட்டையில்தான் வாகனங்கள் வைத்து டிராவல்ஸ் நடத்தியுள்ளார். அனைவரின் எதிர்ப்போடு கூடிய காதல் திருமணமாம். தன் சொந்த உழைப்பாலேயே, வீடு கட்டி மனைவி மக்களோடு வாழ்ந்து வந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட நட்டத்தில் அனைத்து வாகனங்களையும் விற்றுவிட்டு ஒரே மகிழுந்தோடு மனைவி மக்களோடு சென்னை கிளம்பிவந்து, தனக்காக ஒரு வாரமாக வீடு தேடியுள்ளார். ஒன்றும் சரியாகக் கிடைக்கவில்லை. உடனே, தன் மனைவி மக்களை அருப்புக்கோட்டையிலேயே விட்டுவிட்டு, தான் மட்டும் மகிழுந்தோடு வந்து தன்னை ஓலாவில் இணைத்துக்கொண்டு, அறையே எடுக்காமல், தன் மகிழுந்திலேயே வாழ்கிறார். காலையில் வரும் முதல் சவாரியே விமான நிலையம்தானாம். அங்கே உள்ள கழிப்பறை மற்றும் குளியலறைக்கு 20 ரூபாய் கொடுத்து காலைக்கடனை முடித்து விட்டு, தன் முதல் சவாரியைத் தொடர்ந்து, இரவு தூக்கம் வரும் வரை ஓட்டுகிறார். பின் வண்டியை ஓரம் கட்டிவிட்டு வண்டியிலேயே தூங்கிவிடுகிறார்.
 
இரவில் காவல்துறை அதிகாரிகளின் தொந்தரவு இருக்காதா? என்றேன். இருக்காமலா அவர்களுக்குத் தேவையானதை கொடுத்தால் போதுமென்றார். இப்போதெல்லாம் கூகிள் பேயில் தனக்கான கையூட்டை 100ரூ அல்லது 150ரூ என்று வாங்கிக் கொள்கிறார்களாம். இப்படி வாழ்ககையை சமாளித்துக்கொண்டு 30 நாட்கள் வாகனம் ஓட்டுகிறார். பின் தன் வண்டியை தன் ஊர்க்காரரின் பணிமனையில் (ஒர்க்ஷாப்பில்) நிறுத்திவிட்டு 10 நாட்கள் கட்டாய விடுப்பில் தன் மனைவி மக்களோடு வாழ்கிறார். அதாவது 30:10 என்ற விகிதத்தில் பல வருடங்களாக தன் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக நடத்தி வருகிறார்.
 
வெளிநாட்டில் தொழில் புரியும் மலையாளிகள் அப்படித்தான் 6 மாதம் வேலை 6 மாதம் ஓய்வென்று வாழ்வார்கள். அதுபோலவே இவரும் தன் வாழ்வை வேறு விகிதத்தில் அமைத்துக் கொண்டு அறையே எடுக்காமல் வேலை பார்ப்பது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது. ஓலாவில் உள்ள அனைத்து நுட்பங்களையும் அறிந்து வைத்துள்ளதால், இவருக்கு மட்டும் வண்டி நிற்காமல் ஓடுகிறதாம். இடையிடையே இவரிடம்தான் பலரும் ஆலோசனை கேட்கிறார்கள். அவர்கள் அனைவருமே எதேச்சையாக அறிமுகமானவர்களே. அனைவரிடமும் நட்பு பாராட்டி தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கும் இவரின் குணம் எம்மை வெகுவாக ஈர்த்தது. அவரின் பெயர் எனக்கு ஞாபகத்தில் இல்லையாயினும் அவரின் வாழ்வியல் என் மனதை விட்டுப்போகவில்லை உறவுகளே.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.... யாருக்குத்தான் கஷ்டமில்லை. ஆயினும் நம் வாழ்விற்கான சூத்திரத்தை நாமே கண்டறிந்தால், அந்த நண்பரைப்போல் நம் வாழ்வும் மகிழ்ச்சியாக அமையாதா என்ன?!
 
✍️செ. இராசா

No comments: