03/07/2021

நெற்றிக்கண் திறப்பினும் --- வெண்பாவில் வாதம்

 


#நெற்றிக்கண்_திறப்பினும்
#வெண்பாவில்_வாதம்

#சிவனின்_வினா_1
என்பாட்டில் குற்றமென்றோன் எங்குள்ளான் இச்சபையில்
என்முன்னே வந்திடடா இங்கு!

#அரசனின்_பதில்_2
பண்புடன் பேசுங்கள் பாட்டுடைப் பாவலரே
கண்ணியம்தான் இச்சபையின் காப்பு

#சிவனின்_வினவல்_3
சீற்றத்தைத் தூண்டாதே செண்பகப் பாண்டியா..
கூற்றினைக் கூறியதார் கூறு

#பாண்டியனின்_பதில்_4
ஐயாப் புலவரே ஆத்திரம் வேண்டாமே..
பொய்யாப் புலவரிவர் பார்

#சிவனின்_நையாண்டி_5
அரசன் இருக்க அதிகாரம் எங்கோ?
முரணாய் இருக்குதே மாண்பு

#புலவர்களின்_பதில்_6
நற்றமிழ் சங்கத்தில் நக்கீரர் தானய்யா
கற்றோரில் மூத்த கவி

#சிவனின்_நேரடிக்_கேள்வி_7
நீர்தான் பெருங்கவியாய் நிற்கின்ற ஓர்கவியோ...!!
கோர்த்திட்ட குற்றமென்ன கூறு

#நக்கீரர்_பதில்_8
கோர்த்திட்ட பூவால்தான் கூந்தலிலே வாசமெல்லாம்
வார்த்துள்ளீர் மாறுபொருள் வைத்து

#சிவனின்_வாதம்_9
உயர்சாதிப் பெண்களுக்கும் உன்கூற்று மெய்யோ?!
உயிர்நீக்கும் நெற்றிக்கண் ஓய்!

#நக்கீரனின்_நச்சென்ற_பதில்_10
எம்மை எரித்தாலும் எம்வாக்கில் பொய்யில்லை
எம்மயிரும் ஓர்மயிரே இங்கு

✍️செ‌. இராசா

No comments: