06/07/2021

குறளுரையாடல் ---மருத்துவர் ஐயாவுடன் நான் ---- காமத்துப்பால்---கரு: பிரிவும்ஏக்கமும்

 



#1_ஐயா
காதற்பா வென்றால் கடிதே படைக்கும்நீர்
சாதலிலா வாழ்வுக்குச் சான்று.

(கடிதே- விரைவாய்)

#2_நான்
சான்றிதழ் வேண்டுமா சத்தியத்தின் முன்னாலே
ஊன்கலந்த நீயென் உயிர்

#3_ஐயா
உயிரில் கலந்துள்ள உண்மைத் தமிழோ
பயிலும் அகத்திணையோ பார்.

#4_நான்
பார்க்கின்ற அத்தனையும் பைந்தமிழாய் நிற்பானே
கோர்த்திடடா நீயென் கரம்

#5_ஐயா
கரம்பிடிக்குங் காலையில் காதல் திலக
வரம்வடிப்பேன் நெற்றியில் வா.

#6_நான்
வாவென்று சொன்னவுடன் "வாவ்"என்று வந்துவிட்டேன்
போவென்றால் எல்லாமும் போச்சு

#7_ஐயா
போவெனல் பண்பல்ல போய்வா எனல்பண்பு
வாவெனல் காதலின் வாழ்த்து.

#8_நான்
வாழ்த்தி வழியனுப்ப வாசலிலே வந்தவுடன்
ஆழ்த்தும் வலிமிகும் அன்பு

#9_ஐயா
அன்புதான் காதலாகும் அன்புதான் நட்பாகும்
அன்பின் வழிய(து) அறம்.

#10_நான்
அறமில்லாச் சொல்லால் அளக்கின்றார் இங்கே
மறவாமல் சீக்கிரம் வா

#11_ஐயா
வாவெனும் பண்பு வசந்தத்தின் காட்சியாம்
போவெனல் பாலைப் பொழில்

#12_நான்
பொழில்வனம் நீரில்லேல் பாலைவனம் தானே..
அழியாமல் நீகாக்க வா

#13_ஐயா
வாவென்னும் நல்வரவும்
வாழ்க வளமுடனும்
போவென்றால் போகாப் பொருள்.

#14_நான்
பொருள்தேடத் தானே புறப்பட்டேன் என்றாய்
பொருளாய் இருப்பேன்நான் போ

#15_ஐயா
போவென்னும் சொல்லின் பொருள்நான்
பொருளதுவும்
போவென்றால் போகாத போக்கு.

#16_நான்
போக்குவதைப் போக்கி பொறுமையுடன் காத்தயெமைக்
கோர்த்திடவா உள்ளதைக் கொண்டு.

#17_ஐயா
கொண்டுவந்த தொன்றுமில்லை கொண்டுசெல்லும் பண்பொன்றைக்
கண்டேன் அது-அன்பு காண்.

#18_நான்
காணும் விழிகொண்டே கைவிலங்கு போட்டபின்புப்
பேணும் கலைகற்றோர் பெண்

#19_ஐயா
பெண்னெனும் பண்பின் பெருமிதம் தாய்மைஅப்
பண்புள்ளே பேராண்மை பார்.

#20_நான்
பார்த்த முதல்நொடியே பற்றிய வேகத்தில்
வார்த்த கவிதைபோல் வா

✍️மருத்துவர்_ஐயாவுடன்_நான்

No comments: