14/07/2021

குறளுரையாடல் ---------- மருத்துவர் ஐயாவுடன் நான் ---------- கரு பொது

 


#குறளுரையாடல்
#மருத்துவர்_ஐயாவுடன்_நான்
#கரு_பொது

#ஐயா_1
யாக்கும் குறள்மணிகள் யாவும்
இகல்நீங்கிக்
காக்கும் அருள்மணிகள் காப்பு.

#நான்_2
காப்புரிமை கொண்டவர்போல் கத்துகின்ற மூடரின்
காழ்ப்புணர்வு திட்டத்தைக் காண்

#ஐயா_3
காண்பன எல்லாம் கனியின்பம் தோய்ந்ததாக
வேண்டும் அகநட்பை வேண்டு.

#நான்_4
வேண்டுவதை வேண்டி விடாமல் தொடர்வோரை
வேண்டுவதே பின்தொடரும் வேண்டு

#ஐயா_5
வேண்டுதலும் வேண்டா வெறுப்பும் அகநட்பில்
யாண்டும் உளவோ அறி.

#நான்_6
அறியாத மெய்யை அறிந்ததாய் எண்ணல்
அறியாமை என்றே அறி

#ஐயா_7
அறிவுடைமை அறியாமை ஆகியன ஓரொளிச்
செறிவதன் மாற்றங்கள் செப்பு.

#நான்_8
செப்புவதைச் செப்பியும் சிந்தையிலே ஏற்றாதோர்
எப்போதும் அப்படியே இங்கு

#ஐயா_9
இங்குமங்கும் எங்கும் நிறைவாய் நிறைந்திருக்கும்
கங்குகரை யற்றதைக் காண்.

#நான்_10
காண்கின்ற மெய்ப்பொருளைக் கண்டதுபோல் சொல்வோரை
வேண்டாத நட்பாய் விலக்கு

#ஐயா_11
விலக்க இயலா(து) 'இருப்பதும் ஒன்றே'
பலவற்றில் ஓரான்மா பார்.

#நான்_12
பார்த்தன்போல் பார்ப்போரே பற்றுகிறார் வெற்றியினை
நேர்த்தியுடன் நோக்கியே நில்

#ஐயா_13
நில்லென்று சொன்னாலும் நிற்காது காலவோட்டம்
சொல்லைச் செயலாக்கல் செய்.

#நான்_14
செய்கின்ற செய்கை சிறிதாய் இருந்தாலும்
செய்வதைச் சீருடன் செய்

#ஐயா_15
செயலுக்(கு) உரிய செம்மையாம் இப்பார்
இயலா(து) எனப்படுவ(து) இல்.

#நான்_16
இல்லையெனச் சொல்லாமல் எப்போதும் புன்னகையில்
உள்ளதில் கொஞ்சம் உதவு

#ஐயா_17
உதவி எனும்சொல் உதட்டளவில்.. சேவை
இதய அளவின் இனிது.

#நான்_18
இனிதாகப் பேசியபின் ஏமாற்று வோரை
துணிவோடு பேசாமல் தூக்கு

#ஐயா_19
தூக்கி உயர்த்தும் துணிவதை வேண்டுவோம்
தாக்கி அழிப்பது தாழ்வு.

#நான்_20
தாழ்வுடன் எண்ணித் தலைகுனிந்து போகாமல்
வாழ்கின்ற வாழ்வேநல் வாழ்வு

✍️ ஐயாவுடன் நான்

No comments: