28/04/2020

#வஞ்சம்



வறுமையின் உச்சத்தில்
வெறுமையில் வாடுகையில்
பால்ய நண்பரிடம்
பசு மாடு வேண்டிவரப்
பதியினை நச்சரித்துப்
பாசமழைக் கொட்டியதில்
ஏழை அந்தணரும்
இப்படி எண்ணுகின்றார்;

பாஞ்சால மன்னனிடம்
பால் மாடு வேண்டுவதா?!
என்ன கொடுமையென்று
அந்நேரம் யோசித்து
நட்பின் காரணத்தால்
நாடியேச் செல்கின்றார்!

துருபத நண்பா; நான்
துரோணன் வந்துள்ளேன்
எப்படி இருக்கின்றாய்?!
செப்பிட வேண்டுகின்றேன்!

சுடுசொல் கேட்டதுபோல்
கடுமுக துரு-பதரும்
அகம்பாவ மனத்தோடு
"யார் நீ?" என்றிடவே
'ஆ' வேண்டி வந்தவரும்
'ஆ' வென்று அதிர்கின்றார்!

மன்னனாய் ஆனபின்னே
மண் பாதி என்றாயே
மன்னன் ஆனதினால்
மமகாரம் கொண்டாயோ?!

மண்ணா நான் கேட்டேன்?!
மண்ணள்ளிப் போட்டாயே
நண்பா கேட்டிடுவாய்
நாளை நடப்பதனை;

எந்தன் கல்வியினால்
உன்னை வென்றிடுவேன்!
மண்ணை வென்றிங்கே
மனிதம் காட்டிவிடுவேன்!

சொன்னதுபோல் அந்தணரும்
தன்திறன் காட்டிவிட்டு
பற்றிய வெற்றியைப்
பங்கிட்டுக் கொடுக்கின்றார்!

தோல்வியை ஏற்காத்
தோழனாம் துருபதனும்
பழிக்குப்பழி வாங்கும்
வழி ஒன்றைக் கண்டவனாய்
திருஷ்ட தியூமனென
திருமகனைப் பெறுகின்றார்!

கால ஓட்டத்தில்
காழ்ப்புணர்வு போனாலும்
பகையினை மறந்துவிட்டு
பழையவர்கள் சேர்ந்தாலும்
எண்ண விதைதூவி
எழுந்த விருட்சத்தால்
பாரதப் போரன்று
பாஞ்சாலர் வீழ்கின்றார்!

தந்தையின் நண்பரே
தந்தையைக் கொன்றதினால்
திருஷ்டனின் கையாலே
துரோணரும் வீழ்கின்றார்!

புறப்போர் முடிந்தாலும்
அகப்போர் முடிக்காத
துரோணரின் மைந்தனோ
திருஷ்டனைக் கொல்கின்றான்!

எதை எதை விதைத்தோரோ
அதைத்தானே அறுக்கின்றார்!
அதை எவர் அறிந்தாரோ
அவர்தானே உயர்கின்றார்!
ஆம்.....
அவர் 'தானே' உயர்கின்றார்!

✍️செ.இராசா

No comments: