11/04/2020

"#சாவா_மூவாப்_பேராடு"



அணையா தீபமேற்ற
ஆசையுற்ற பெண் ஒருத்தி
ஆலயக் கணக்கரிடம்
அனுமதி வேண்டுகிறார்!

ஆண்டு முழுவதற்கும்
அவரும் கணக்கிட்டு
ஆழாக்கு நெய்யூற்ற
ஆகின்ற தொகையாக
முப்பத்தி இரண்டு காசை
முறையாகப் பெறும் போது
இராசராசச் சோழன் வந்து
ஒரு திட்டம் தீட்டுகின்றார்!

வந்த காசை வரவு வைத்து
அந்த நேரம் சென்றிருந்தால்
அதைப் பற்றி நாம் பேச
அவசியமும் இல்லையன்றோ?!

ஏழைகளின் வாழ்வினிலே
ஏற்றிடுவோம் தீபமென்று
எல்லோரையும் வரவழைத்து
இயம்புகின்றார் இப்படியே;

முப்பத்து இரண்டு காசை
மூலதனம் ஆக்குகிறேன்!
ஒரு காசில் மூன்று ஆடு
ஒருவருக்குத் தொண்ணூற்றியாறு
கடனாகத் தருகின்றோம்
கடமையாக நெய் தருவீர்!
ஆழாக்கு நெய் தந்து
ஆலயத்தில் ஒளி தருவீர்!

பெருக்கிடும் குட்டி தரும்
வருமானம் உங்களுக்கே!
கடமை முடிந்த பின்னே
கடனாடு எங்களுக்கே!
காசாகத் தந்தாலும்
கணக்காயர் ஏற்றிடுவார்!

நிபந்தனை ஒன்றேதான்
நினைவிலே ஏற்றிடுவீர்!
பெறுவது போல் தரவேண்டும்!
பிழையின்றி நடக்க வேண்டும்!
மூப்பில்லா ஆடுகளாய்
முறையாகத் தந்தால் தான்
சாகாது இத்திட்டம்
சாதிக்கும் நம் திட்டம்!

பேர் சொல்லும் திட்டத்தின்
பெயரிதுவே கேட்டிடுவீர்
"#சாவா_மூவாப்_பேராடு"
சாதித்தால் எமை நாடு!

ஆலயத்தின் விளக்கொளியில்
ஆயர் வீட்டை மிளிர வைத்த
ஆட்சியாளர் ஆண்டதுபோல்
ஆகிடுமா நம் நாடு?

ஆன்றோரே விளக்கிடுவீர்!

✍️செ.இராசா

No comments: