11/04/2020

#ஓஷோ_2



ஓஷோ தன் கதைகளின் வழியாக கருத்து சொல்லும் அழகு அவரின் அழகிய தனித்துவம். அப்படி அவர் ஒரு மரத்தையும் சிறுவனின் நட்பையும் வைத்து அவர் சொல்லும் அழகிய கதையையும் கருத்தையும் இங்கு பார்ப்போம்.

*பெரிய மரமும் ஒரு சிறுவனும் நட்பு கொள்கிறார்கள்.

1. ஆம் அன்பில் பெரியது சிறியது கிடையாது. அன்பிருந்தால் நட்பு சாத்தியமே.
2. பொதுவாக பெரியது எப்போதும் தன்முனைப்போடு (ஈகோ) இருக்கும். ஆனால், அன்பிருந்தால் இங்கே பெரியது சிறியது என்ற பாகுபாடு கிடையாது.
3. அன்பு எப்போதும் யாராக இருந்தாலும் அணைக்கவே செய்யும்.

* மரத்தின் கிளைகள் சிறுவன் விளையாடுவதற்காக வளைந்து கொடுக்கும். அவன் அதில் ஏறி சந்தோஷமாக விளையாடுவான். மரம் அவனை மகிழ்விப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. தன் மலர்களையும் கனிகளையும் அவனுக்கு வழங்குவதில் ஆனந்தம் அடைகிறது. மரத்தின் அடியில் சிறுவன் தன்னை ராஜாபோல் உணர்கின்றான்.

4. அன்பு எப்போதும் வளைந்து கொடுக்கும். தன்முனைப்பு வளைந்து கொடுக்காது.
5. அன்பைப் பிறருக்கு கொடுக்கும்போது மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கிறது. தன்முனைப்போ பிறரிடமிருந்து வாங்கும் பொழுதே மகிழ்ச்சி கிடைக்கிறது,
6. அன்பு கொட்டிக் கிடக்குமிடத்தில் ஒருவன் ராஜாபோல் உணர்கின்றான். தன்முனைப்பு கொட்டிக் கிடக்குமிடத்தில் ஒருவன் ஒன்றுமில்லாதவனாக உணர்கின்றான்.

*பையன் இப்போது வளர்ந்து விட்டான். மரத்தின் கிளைகளில் ஏறி எல்லாக் கிளைகளையும் பற்றி ஆடுகிறான் பாடுகிறான். மரமும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது.

7. தன்னால் மற்றவர்கள் பெரும் சுகம் கண்டு என்றும் அன்பானது மகிழ்ச்சி அடைகிறது. தன்முனைப்போ மற்றவர்கள் படும் துன்பம் கண்டே மகிழ்ச்சி அடைகிறது.

* சிறுவன் பெரியவனாக வளர்ந்துவிட்டான். முன்புபோல் மரத்தை நோக்கி வருவதில்லை. மரம் அவனையே நினைத்து கவலை அடைகிறது.

8. அன்பு மற்றவரிடம் பகிர முடியாதபொழுது கவலை கொள்கிறது. அன்பு மற்றவரிடம் பகிரப்படும்பொழுதே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

*பலநாள் கழித்து அவன் அவ்வழியாக வருவதுகண்டு மரம் அவனிடம் தன் ஏக்கத்தைக் கூறியது. "ஏன் நீ முன்புபோல் வருவதில்லை" என்று கேட்டது. "நான் ஏன் உன்னிடம் வரவேண்டும். உன்னிடம் என்ன இருக்கிறது? உன்னால் பணம் தரமுடியுமா?" என்றெல்லாம் பேசினான்.

9. அன்பிருந்தால் வேறெந்த எதிர்பார்ப்பும் இருக்காது. தன்முனைப்பு இருந்தால் எப்போதும் எதிர்பார்ப்பு மட்டுமே இருக்கும்

* மரமும் பதிலுரை கூறியது: "நான் நிழல் தந்தேன், தலையசைத்து விசிறி விட்டேன், மகிழ்ச்சியை அள்ளிக்கொடுத்தேன். பணம் தானே வேண்டும். என் பழங்களை எடுத்துக்கொள். அதைப் பணமாக்கு" என்றது. அவனும் அனைத்து பழங்களையும் அள்ளிக்கொண்டு சென்றான். அவன் பணக்காரனாகிவிட்டான். பிறகு அவன் பல நாட்கள் வரவில்லை.

10. தன்முனைப்பு எப்போதும் வேண்டும் வேண்டும் என்றே கேட்கும்.

*பலநாள் கழித்து மீண்டும் அவ்வழியே வந்தவனிடம் அம்மரம் "வா நண்பா வா...என்னோடு பேசு..என்னை அணைத்துக்கொள்" என்றது. "நீ என்ன பைத்தியமா" என்றான் அந்த திடீர் பணக்காரன்.

11. அன்பு பார்ப்பதற்கு குழந்தைத் தனமாகவோ அல்லது பைத்தியக்காரத் தனமாகவோதான் தெரியும்.

*வாழ்வில் நொடித்துப்போய் மீண்டும் வந்தான். "என்ன நண்பா வேண்டும்" என்று மரம் கேட்டது. "வீடுகட்ட மரம் வேண்டும்" என்றான். "என் கிளைகளை வெட்டிக்கொள்" என்றது மரம். பிறகு பல நாள் கழித்து மீண்டும் வந்தான். நான் நொடித்துப் போனேன். பிழைப்பதற்கு படகிருந்தால் போதும் என்றான். அதற்கென்ன என் அடிப்பகுதி வரை வெட்டிக்கொள் என்றது மரம்

12. அன்பு எப்போதும் கொடுப்பதற்குத் தயாராகவே இருக்கிறது.
13. தன்முனைப்பு எங்கே ஆதாயம் உள்ளதோ அங்கேயே மீண்டும் மீண்டும் செல்கிறது. பிச்சைக்காரத்தனம்போல்...
14. அன்பு ஒரு பேரரசன், அன்பு ஒரு கொடையாளி, அன்பு ஒரு ஈகையாளி.

*எல்லாம் முடிந்து நொடித்துப்போய் தள்ளாடிப் போய் அவன் கிழவனாக வந்தான். "நண்பா வா...என் அடிமரம் மேல் அமர்ந்து கொள்" என்று மரம் அப்போதும் அன்போடு பேசியது.

15. ஆம் அன்பு கொடுப்பதில் இருக்கிறது. தன்முனைப்பு எடுப்பதிலேயே இருக்கிறது.

அன்பு செய்வோம்---அன்பு செய்வோம்--அன்பிற்காக அன்பு செய்வோம்

--இராசமாணிக்கம்--

No comments: