12/01/2019

#தமிழர்_திருநாள்_2019_கத்தார்


இனிய வணக்கம் உறவுகள,

இது நேற்றைய தினம் கத்தரில் நடைபெற்ற #தமிழர்_திருநாள்_2019_கத்தார் விழாக் கொண்டாட்டம் பற்றிய என் அனுபவக் கட்டுரை. வெளிநாட்டில் ஒரு தமிழ் நிகழ்வு எப்படி கொண்டாடப்படுகிறது என்ற ஆர்வத்தில் உள்ளவர்களுக்காகவே இந்தப் பதிவு. நன்றி.

நானும் கத்தரில் பல நிகழ்வுகளுக்குப் போய் வந்துள்ளேன். ஆனால், நேற்று நான் கண்ட நிகழ்வு முற்றிலும் வித்தியாசமான மற்றும் ஆச்சரியமான நிகழ்வு என்றால் அதில் எள்ளளவும் மிகையில்லை. ஆம்... மற்றைய நிகழ்வுகள் நடத்துபவர்கள் எல்லாம் பொருளாதர ரீதியில் உயர்ந்த இடத்தில் பணிபுரிபவர்கள். ஆனால், நேற்றைய நிகழ்வு நடத்தியவர்களில் பெரும்பாலும் மிகவும் குறைந்த ஊதியம் வாங்கும் உடலுழைப்பை ஆதாரமாய்க் கொண்ட தமிழ்ச்சொந்தங்கள்.

#நிறைகள்

1. இதுபோல் இதுவரை யாரும் நடத்தாத மிகப்பெரிய நிகழ்விற்கு “அனுமதி இலவசம்” என்றது.
2. கட்டுப்பாடுகள் நிறைந்த நாட்டில் மிகப் பெரிய கூட்டத்தைக்கூட்டி ஒரு நாள் முழுமையும் நிகழ்வு நடத்த அனுமதி வாங்கியது.
3. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழுக்க முழுக்க எங்களைத் தமிழ்க்கடலில் கடேசி வரை நனைய வைக்கும் வகையில் பார்த்துக்கொண்ட அமைப்பாளர்களின் திட்டமிடல்.
4. அருமையான தரமான சைவ உணவு, குடிநீர் போன்றவையும் இலவசமாக வழங்கியது.
5. தேன், திணை, தமிழ் தினசரி நாட்காட்டிகள், தமிழ் நூல்கள், தமிழ் ஆடைகள்....போன்றவை வெளியே மிகவும் குறைவான விலையில் இலாப நோக்கமின்றி விற்பனை செய்தது.
6. உரியடித்தல், பம்பரம் விடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை போட்டியாக வைத்து கத்தரில் நடத்தியது.
7. பறையடித்தல், சிலம்பாட்டம், யாருமே அறியாத பாரம்பரிய தற்காப்புக் கலைகள், மிகவும் நேர்த்தியான சாமானியனும் ரசிக்கும் வகையில் நடந்த பரத நாட்டியம், மிகச்சிறப்பான நடிப்பில் அமைந்த சேரன் செங்குட்டுவனின் காவிய நாடகம்.......அட அட அடா.
8. தமிழ் உணவின் மகத்துவம்பற்றி மிகவும் சிறப்பான வகையில் மருத்துவர் கு. சிவராமன் வழங்கிய சிறப்புரையின்போது அரங்கமே அதிர்ந்தது இன்னும் காதில் ஒலிக்கிறது.
இத்தனை நிறைகள் இருந்தாலும் குறைகளும் இல்லாமல் இல்லை. குறைகளைக் களைந்து மேலும் சிறக்க வேண்டும் என்ற வகையில் இங்கேச் சுட்டிக்காட்டுகின்றேன்.

#குறைகள்

1. தமிழர்களின் விழாவாக அழைத்து அனைவரும் ஒன்று சேர்ந்த இடத்தில், கடேசி வரை கட்சி சார்ந்த நிகழ்வாக இல்லாமல் பார்த்துக் கொண்டவர்கள் சில இடங்களில் சறுக்கியது ஏற்றுக்கொள்ள முடியாது.
2. அதிலும் கடேசியாக ஒருவர் தன் தலைவனுக்குக் குழந்தை பிறந்த செய்தியை சொன்னபோது மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசிய அந்த உரை மிகவும் முகம் சுளிக்க வைத்தது.
3. நிகழ்வை சிறப்பு விருந்தினருக்காகத் தாமதமாக துவக்கியதில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மற்றவர்களைக் காக்க வைத்தது நிகழ்வின் சறுக்கலே.
4. காக்க வைக்கும் நேரத்தில் வேறு ஏதாவது நடத்தி அந்த இடத்தை நிரப்பி இருக்க வேண்டும் வேண்டும். அதை செய்யத் தவறிவிட்டார்கள்.
5. பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் நடத்த முடியாமல் போகும் அளவு நேர மேலாண்மையில் தவறி இருக்கக் கூடாது.
6. இயற்கைத் தேவைக்குக் கூட வெளியில் போக முடியாத அளவு சுற்றிலும் பாதையே இல்லாத அளவு நெரிசல். சற்றே சரி செய்திருக்கலாம்.
7. அனுசரணையாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளில் அவர்கள் அமரும் இட ஒதுக்கீட்டில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
8. கத்தரில் இப்படியான நிகழ்விற்கு அனுமதி கிடைப்பதே பெரிய விடயம். அதில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் தமிழர்கள் மறக்கலாமா?!!
குணம் நாடி குற்றம் நாடி பார்க்கும்போது இந்த நிகழ்வு சந்தேகமே இல்லாமல் ஆச்சரியம் தரும் அளவில் நடந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வே. இதேபோல் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற குறைகளைக் களைந்து மேலும் மேலும் வெற்றி நடைபோட இறைவனை வேண்டுகிறேன்.

வாழ்த்துகள்
வாழ்த்துகள்
✍️செ. இராசா

No comments: