02/02/2018

இனியொரு விதி செய்வோம்--களஞ்சியம் கவிதைப்போட்டி (91)- வெற்றிக்கவிதை


(தமிழ்ப்பட்டறை குழுமம் நடத்திய போட்டியில் மூன்றாமிடம் பிடித்த கவிதை.
நடுவர் திரைப்படப் பாடலாசிரியர், திரு. நிகரன் ஐயாஅவர்களுக்கும், தமிழ்ப்பட்டறைத் தலைவர். திரு. சேக்கிழார் அப்பாசாமி ஐயா அவர்களுக்கும் மற்றும் என்னை ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்)

எப்படி இத்தனை காலங்களாய்-நமை
இப்படி இழிவாய் எண்ணுகின்றார்?!
ஆண்ட இனமென வாழ்ந்தோரை-ஏன்
மாண்ட இனமாய் எண்ணுகின்றார்?!

எங்கே தவறென ஆராய்ந்தால்-அது
இங்கே நம்மிடம் நகைக்கிறதே!
இங்கே தவறுகள் குவிந்திருக்க-நாம்
எங்கோ தேடுதல் முறையன்றோ?!

தாழ்வாய்ப் பார்க்கின்ற கயவர்களை-நம்
தலைவராய் மதித்தது யார்தவறு?
நடிப்பால் மயக்கிய நடிகரின்பால்-நம்
நாட்டைக் கொடுத்தது யார்தவறு?

மாற்றங்கள் இங்கே வருவதற்கு-நாம்
மாற்றத்தை நமக்குள் புகுத்திடுவோம்!
இழந்ததை மீண்டும் அடைவதற்கு-நாம்
இனியொரு விதியை செய்திடுவோம்!

அடக்கிடும் மரபைத் தகர்த்துவிட்டு-நாம்
ஆளுமை பயின்றிட முன்வருவோம்!
நடித்திடும் எவரையும் புறக்கணித்து-இனி
நாமே நாட்டை ஆண்டிடுவோம்!

தனித்தனி சாதியாய்ப் பிரிவுசெய்தால்-இனி
தமிழெனும் சாட்டையைச் சுழற்றிடுவோம்!
தமிழனை மதத்தால் பிளவுசெய்தால்-இனி
தமிழையே மதமாய் மாற்றிடுவோம்!

——செ. இராசா—-


https://www.facebook.com/photo.php?fbid=1961400917511092&set=gm.1978390415813198&type=3&theater&ifg=1

No comments: