07/09/2017

நின்னைச் சரணடைந்தேன்


பாஞ்சால மன்னரின் வேள்வியிலே
பாஞ்சாலி நானும் அவதரித்தேன்!
பார்த்தனின் கழுத்தில் மாலையிட்டே
பாண்டவர் ஐவரை மணமுடித்தேன்
பகடையால் என்னைத் தவறவிட்ட
பதிகளால் நானும் மனமுடைந்தேன்!

கயவர்கள் நிறைந்த அரங்கினிலே
கலங்கிய விழியால் கூறுகின்றேன்!
அரங்கம் முழுவதும் நிரம்பியுள்ள
அரக்கர்கள் கூட்டத்தைக் காணுகின்றேன்!
உடையினைக் களையவே வருபவனை
தடையிட்டு நிறுத்த எவருமில்லை!

கண்ணா நின்னைச் சரணடைந்தேன்
கற்பின் மானத்தைக் காத்தருள்வாய்!
கோவிந்தா நின்னைச் சரணடைந்தேன்
கோபியரைப் போலவே இரட்சிப்பாய்!
மாதவா நின்னைச் சரணடைந்தேன்
மாயவா மின்னலாய் உடன்வருவாய்!

கண்ணா... கண்ணா........
கோவிந்தா...கோவிந்தா...
மாதவா...மாதவா..........

No comments: