26/09/2022

ஔவைத் திங்கள் 10 ---- யார் கவிஞன்?

 


#ஔவைத்_திங்கள்_10
#யார்_கவிஞன்?

யாப்பேதும் கற்காமல் யாத்திடலாம் என்றாலும்
யாப்பறிந்து பாப்புனைந்தால் ஏற்பு!
(1)

யாக்கைக்கும் ஏழுதான் யாப்பிற்கும் ஏழுதான்
கோக்கின்ற அங்கத்தின் கூறு
(2)

இரண்டே அசைகளை இங்குமங்கும் வைத்து
மரபில் கவிபாடல் மாண்பு
(3)

இலக்கண வேலிகட்டி எம்மொழியைக் காக்கும்
புலவனைப் போற்றிப் புகழ்
(4)

யாப்பை உடைத்தெறிய யாப்பறிய வேண்டாமா?
வாய்ப்பறிந்து மீறலாம் வா...
(5)

விருத்தம் வருத்தமென வீண்வாதம் வேண்டாம்
கருத்தான ஓர்கவிதை கட்டு
(6)

ஹைக்கூவோ குக்கூவோ கற்றிந்து நீசெய்தால்
மெய்க்கூவாய் நிற்கும் கவி
(7)

சந்தக் கவிதைக்கும் சத்தான சொல்கண்டு
சிந்தையுடன் சந்தமுடன் செய்!
(8)

தன்னைக் கவியென்று தம்பட்டம் போடாமல்
கண்மூடிக் காண்பான் கவி!
(9)

கவிசெய்வோன் எல்லாம் கவிஞனா என்ன?
கவியென்றே வாழ்வோன் கவி!
(10)

✍️செ. இராசா

No comments: