07/12/2020

குறள் அந்தாதியில்---இல்லைப் பத்து

 




வழக்கத்தில் எல்லாமும் மாறலாம் என்றும்
#உழவின்றி_இல்லை_உலகு
(1)

உலகிற்கே ஊண்தரும் உன்னத மானோர்
கலங்கினால் இல்லை கதி
(2)

கதியின்றி இங்கேக் கதறிடும் பேர்க்குச்
சதிசெய்தால் இல்லை சகம்
(3)

சகத்தினை வாழ்விக்க தன்னையே தந்தும்
அகத்திலே இல்லை அயர்வு
(4)

அயர்வென்ற ஒன்றை அறியாத போதும்
உயரவே இல்லை உழவு
(5)

உழவையே நம்பும் உழவனின் வாழ்க்கை
வளமுடன் இல்லையே ஏன்?
(6)

ஏனென ஆயாமல் இப்போதும் விட்டுவிட்டால்
கோனுக்கும் இல்லை கொடை
(7)

கொடைதரும் எண்ணம் குறையாத நாட்டில்
படைகளுக்(கு) இல்லை பணி
(8)

பணிசெய்யும் போதில் பணிசெய்வோர் என்றும்
பணிவதே இல்லை பதர்க்கு
(9)

பதர்க்கும் கிடைக்கும் பதவியால் இங்கே
எதற்குத்தான் இல்லை வழக்கு?!
(10)

✍️செ.இராசா

#குறள்_அந்தாதியில்
(அந்தாதி- ஈற்றுச்சீர் முதல்சீராக இருப்பது மட்டுமல்ல, முதல் குறளின் முதல் சீரும் இறுதிக்குறளின் இறுதிச்சீரும் ஒன்றாக இருக்கும்)
#பத்து_குறள்களிலும்_இல்லை_என்ற_சொல்_ஆறாம்சீரில்_உள்ளது
#எனவே_இல்லைப்_பத்து_எனலாம்

No comments: